கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் அக்கட்சிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் ஹரப்பனஹல்லி சுயேச்சை எம்எல்ஏ.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 136 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக 65, மஜத 19 இடங்களை மட்டுமே பிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 10-ம் தேதி நடந்தது. இதில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. பாஜக 224, காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாயசங்கம்), மதச்சார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133, சுயேச்சைகள் 918 உட்பட 2,613 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இத்தேர்தலில் ஹரப்பனஹல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுயேச்சை எம்எல்ஏ லதா மல்லிகார்ஜூன் தனது ஆதரவை காங்கிரஸுக்கு நல்கியுள்ளார். அவர், கர்நாடக மாநிலம் முன்னாள் துணை முதல்வர் எம்.பி.பிரகாஷின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஹரப்பனஹல்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் கருணாகர ரெட்டியை 13 ஆயிரத்து 845 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
இந்நிலையில் அவர் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா, "ஹரப்பனஹல்லி சுயேச்சை எம்எல்ஏ திருமதி லதா மல்லிகார்ஜூன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் காங்கிரஸ் மூத்த தலைவர் மறைந்த முன்னாள் துணை முதல்வர் எம்.பி. பிரகாஷின் மகளாவார்.
அவர் இன்று தனது நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரஸ் கட்சிக்கு அளித்துள்ளார். அவருடைய கொள்கையின் வேர்களையும், காங்கிரஸ் சித்தாந்தத்தின் மீதான பிடிப்பையும் அடிப்படையாகக் கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவருக்கும், அவரது கணவர் மல்லிகார்ஜுனுக்கும் நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு மட்டுமல்ல 6.5 கோடி கன்னடிகர்களும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.
பிரதமர் மோடி வாழ்த்து:
முன்னதாக நேற்று கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ”கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வெற்ற பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு தனது வாழ்த்துகள் என்றும் கர்நாடக தேர்தலில் தங்களை ஆதரித்தவர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் நன்றி” என்றும் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று முதலமைச்சர் யார் என்பது தீர்மானிக்கப்படும் என கூறப்படுகிறது.