காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தொடர்ந்து பெங்களூரில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் சித்தராமையா வீட்டின் முன் ஒட்டப்பட்ட ராமர் மற்றும் ஹனுமன் திருவுருவம் பொறிக்கப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பை கிளப்பியுள்ளன.
கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வீட்டின் முன்பு ராமர் மற்றும் ஹனுமன் ஆகிய திருவுருவங்கள் பொறிக்கப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. பின் அந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டன.
கர்நாடகாவில் கடந்த 10-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்கு எண்னிக்கை நடைபெற்றது. ஏற்கனவே கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரசுக்கு ஆதரவாக இருந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் பெரும்பான்மையாக வெற்றி பெற்றது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைமை சித்தராமையா மற்றும் சிவகுமார் ஆகிய இருவரில் யாருக்கு முதல்வர் பதவியை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் அதிகரித்துள்ளது. முதலமைச்சரை தேர்வு செய்ய தலைமை 3 மேலிட பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. இதற்கிடையே சித்த ராமையா மற்றும் சிவகுமார் ஆதரவாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு அவர்கள் இருவருக்கும் ஆதரவு போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
இதையடுத்து நேற்று மாலையில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின், ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் உள்ள ஹில்டன் ஓட்டலில் நடைபெற்றது. இதில் காங்கிரஸின் அடுத்த முதலமைச்சர் யார் என தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் காங்கிரஸ் மாநில தலைவர் சிவக்குமார் மற்றும் மூத்த தலைவர் சித்தராமையா ஆகியோர் இடையே, முதலமைச்சர் பதவிக்கு கடும்போட்டி நிலவி வருகிறது. இதனால் யார் முதல்வர் என்பதை மேலிடம் முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகர்ஜுனா கார்கேவை அவரது இல்லத்தில், மூத்த தலைவர் சித்தராமையா சந்தித்தார். இதுதொடர்பாக பேசிய மல்லிகர்ஜுனா கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே ”கார்கே மற்றும் சித்தராமையா இடையேயான சந்திப்பு மரியாதை நிமித்தமானது மட்டுமே. இது அரசியல் சந்திப்பு இல்லை” என விளக்கினார்.
முதலமைச்சர் பதவி தொடர்பாக சித்தராமையா மற்றும் சிவக்குமார் இடையே கருத்து மோதல் நிலவுவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக தும்கூரில் செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார் மூத்த தலைவர் சித்தராமையாவுடன் தனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று தெரிவித்தார். கட்சிக்காக தான் பலமுறை தியாகம் செய்துள்ளதாகவும், சித்தராமையாவிற்கு உறுதுணையாக இருந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க
மரக்காணத்தில் பதற்றம்: கள்ளச்சாராயம் குடித்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதி... 3 பேர் உயிரிழப்பு