மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 11 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் ஏற்கனவே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்நிலையில், சிவசேனா உத்தவ் அணியின் இளம் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆதித்யா தாக்கரே, இன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது டெல்லி இல்லத்தில் சந்தித்து தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தாக்கரே, தன்னை சந்தித்த புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் கெஜ்ரிவால்.


கவனம் ஈர்க்கும் தேசிய அரசியல்:


இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "இன்று எனது இல்லத்தில் ஆதித்யா தாக்கரேவுக்கு விருந்து அளிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து அவருடன் விரிவாக உரையாடினேன்" என குறிப்பிட்டுள்ளார்.


மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில், ஆண்டின் தொடக்கத்தில், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க. அல்லது பா.ஜ.க. அங்கும் வகிக்கும் கூட்டணியே ஆட்சி அமைத்தது.


கர்நாடக தேர்தல்:


இரண்டாவது கட்டமாக, கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள், நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில், காங்கிரஸ், பாஜக ஆகிய தேசிய கட்சிகள் நேரடியாக மோதி கொண்டதால் நாட்டின் கவனம் இந்த தேர்தல் பக்கம் திரும்பியது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடத்தி முடிக்கப்பட்ட தேர்தலில், காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆளும் கட்சியான பாஜக 66 இடங்களை வென்று ஆட்சியை இழந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு பெரும் ஊந்துசக்தியாக மாறியுள்ளது. இச்சூழலில், கெஜ்ரிவால், ஆதித்யா தாக்கரே சந்திப்பு நடந்துள்ளது.


இதை தொடர்ந்து, இந்தாண்டின் இறுதியில், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், சத்தீஸ்கர், பாஜக ஆளும் மத்திய பிரதேசம், பாரத் ராஷ்டிர சமிதி ஆளும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.


சமீபத்தில், முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் அறிவிப்பு ஒன்று வெளியானது. இந்த அறிவிப்பு, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவை அளித்திருந்தது. வரும் தேர்தலில் தன்னுடைய கட்சி தனித்து போட்டியிடும் என்றும் இதுவே தன்னுடைய திட்டம் என்றும் ஒடிசா முதலமைச்சரும் பிஜு ஜனதா தள கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் அறிவித்திருந்தார்.


அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், மம்தாவை சமீபத்தில் சந்தித்து பேசினார். இதை தொடர்ந்து, நவீன் பட்நாயக்கை மம்தா சந்தித்தார். இப்படிப்பட்ட சூழலில், நவீன் பட்நாயக், முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்திருந்தார்.