இந்தியாவின் அண்டை மாநிலமாக நேபாளம் விளங்குகிறது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர வைத்த நிலையில், தற்போது நேபாள நாட்டில் மீண்டும் இன்று நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் தலைநகரான டெல்லியிலும் எதிரொலித்தது. டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் எதிரொலித்தது.
நேபாள நிலநடுக்கம்:
இந்தாண்டு நில நடுக்கத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் உலக நாடுகளை கவலையடையச் செய்து வருகிறது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவான இந்த கோர நிலநடுக்கத்தால் 157 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேபாளத்தில் கர்ணாலி மாகாணத்தின் ஜாஜர்கோட் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஜாஜர்கோட், ரூகம் மாவட்டங்கள் சிதைந்தது என்றே சொல்லலாம். 157 பேர் உயிரிழந்த இந்த கோர நிலநடுக்கத்தில் 375க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
டெல்லியிலும் தாக்கம்:
இந்த கோர விபத்து ஏற்படுத்திய சோகத்தில் இருந்தே நேபாளம் இன்னும் மீளாத வேளையில், இன்று நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. பொதுவாக புவியியல் அமைப்பின்படி, ஆப்கானிஸ்தான், நேபாளம் போன்ற அண்டை நாடுகளில் ஏற்படும் நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கும் என்றே புவியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டெல்லி – என்.சி.ஆர்., உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களிலும் உணரப்பட்டது. நேபாளத்தில் இன்று மட்டுமின்றி கடந்த அக்டோபர் 3ம் தேதி, அக்டோபர் 22ம் தேதி, நவம்பர் 3ம் தேதியும் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்ததும், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல உயிர்கள் பறிபோனதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது நேபாளமும் நில நடுக்கத்தால் உயிர்களை பறிகொடுத்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: எங்கும் மரண ஓலம்.. கண்டும் காணாமல் இருக்கும் அமெரிக்கா.. கொந்தளித்த அரபு நாடுகள்
மேலும் படிக்க: TS Tirumurti - Abp Exclusive : ”இஸ்ரேல்-ஹமாஸ் போரை தாண்டியும் பாலஸ்தீனியர்களின் கோரிக்கை நீடிக்கும்” - களத்தில் நின்றவரின் பேட்டி