பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் கடந்த ஒரு மாதமாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் போரை காட்டிலும் பல மடங்கு தீவிரமான தாக்கத்தை இந்த போர் ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடந்து உக்ரைன் போரை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
போர் மீறல்களில் அப்பட்டமாக ஈடுபடும் இஸ்ரேல்:
இது, மேற்காசியாவை மிக பெரிய நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. தாக்குதலை ஹமாஸ் தொடங்கியிருந்தாலும், அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இஸ்ரேல் போர் மீறல்களை செய்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை, 9,480க்கும் மேற்பட்ட பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள், பெண்கள் ஆவர். மருத்துவமனை, அகதிகள் முகாம் என அனைத்து பகுதிகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது உலக மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
காசாவில் நடந்து வரும் போரால் உடைமைகளை இழந்து சிக்கித் தவித்து வரும் மக்களுக்கு டிரக் மூலம் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஐநா வழங்கி வந்தது. ஆனால், போர் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், காசாவில் அவசர உதவிகள் அனைத்தும் தடைப்பட்டுள்ளது.
அமெரிக்கா சொல்வது என்ன?
இப்படிப்பட்ட சூழலில், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுக்க மனிதாபிமான அடிப்படையில் மோதலையும் குண்டு போடுவதை சற்று நிறுத்த வேண்டும் (மனிதாபிமான இடைநிறுத்தம்) என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால், முழுமையான போர் நிறுத்தத்துக்கு அரபு நாடுகள் தொடர் கோரிக்கை விடுத்து வருகிறது.
இதற்கிடையே, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வரும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனிடம் அரபு நாட்டு தலைவர்கள், தங்களது கடும் அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர்.
சமீபத்தில், மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்தி அவசர உதவிகளை காசா பகுதிக்கு கொண்டு செல்வதில் முன்னேற்றம் ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்திருந்தார். ஆனால், அதை பற்றி அவர் விரிவாக பேசவில்லை. இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்த ஆண்டனி பிளிங்கன், "இந்த முயற்சிகள் அனைத்தும் மனிதாபிமான இடைநிறுத்தங்களால் எளிதாக்கப்படும் என்று அமெரிக்கா நம்புகிறது" என தெரிவித்துள்ளார்.
"காசாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் இறப்புக்கு தனிப்பட்ட முறையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பொறுப்பேற்க வேண்டும்.
நெதன்யாகுவிடம் எல்லாம் இனி நாம் பேசவே முடியாது. அவருடன் பேசுவது எந்த விதத்திலும் பயன் அளிக்காது" என துருக்கியே அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தொடரும் குண்டு மழை: கொத்து கொத்தாக மடியும் பிஞ்சுகள்.. அடையாளம் காண உடலில் பெயர் எழுதும் துயரம்