உத்தரப்பிரதேச பாடநூல் வாரியம் அம்மாநில மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இருந்து நேருவை தவிர்த்து, சாவர்க்கரை உள்ளே புகுத்தி உள்ளது. அதோடு மகாத்மா காந்தி, சர்தார் படேல், அம்பேத்கர் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் குறித்த பாடங்களை குறைத்துள்ளனர்.


நேரு நீக்கம், சாவர்க்கர் சேர்ப்பு;


பாரதிய ஜனதா கட்சி 2022 மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட தனது அறிக்கையில் கல்விப் பாடத்திட்டத்தில் பெரிய மனிதர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கைக் கதைகளைச் சேர்ப்பதாக உறுதியளித்திருந்தது. அதனை தொடர்ந்து ஜூலை மாதம் தொடங்க உள்ள புதிய கல்வியாண்டில் இருந்து, உத்தரபிரதேச வாரியம் அதன் மாணவர்களுக்கு இந்தியாவின் 50 சிறந்த தலைவர்களின் வாழ்க்கை மற்றும் வரலாறுகளை பற்றி கற்பிக்கும் முடிவுக்கு வந்திருந்தது.


அதற்காக உருவாக்கிய பாடத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளன. அந்த 50 பேர் பட்டியலில் ஜவஹர்லால் நேரு போன்ற சிலர் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டு இருப்பதும், விநாயக் தாமோதர் சாவர்க்கர் மற்றும் தீன் தயாள் உபாத்யாய் ஆகியோர் சேர்க்கப்பட்டு இருப்பதும்தான் அதிலுள்ள பிரச்சனையாக குறிப்பிடப்படுகிறது. அதோடு மகாத்மா காந்தி, சர்தார் படேல், அம்பேத்கர் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் குறித்த பாடங்களை குறைத்தும் உள்ளனர். 



நேரு ஒன்றும் தியாகம் செய்யவில்லை


இடைநிலைக் கல்வி அமைச்சரான குலாப் தேவி, இது குறித்து பதிலளிக்கையில் நேருவை அதில் விலக்கும் முடிவிற்கு ஆதரவாக பேசினார். அவர் "நேரு நாட்டிற்காக பெரிய தியாகம் எதுவும் செய்யவில்லை. அதனால்தான், நேரு விலக்கப்பட்டார்," என்று நியாயப்படுத்தினார். சாவர்க்கரைச் சேர்த்தது குறித்து அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், “சாவர்க்கர் மற்றும் பண்டிட் தீன் தயாள் உபாத்யாய் போன்ற நமது தலைசிறந்த தலைவர்களைப் பற்றி மாணவர்களுக்கு கற்பிக்கவில்லை என்றால், அவர்களுக்கு வேறு என்ன கற்பிப்பது? இந்தியாவின் பெரிய மனிதர்களின் வாழ்க்கை மற்றும் வரலாறுகளை பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்குப் பதிலாக பயங்கரவாதிகளைப் பற்றி நம் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பினார்.


தொடர்புடைய செய்திகள்: Modi Biden Meeting: ”எதிர்காலம் நாம தான்” - பிரதமர் மோடிக்கு பைடன் தந்த சூப்பர் பரிசு..குஜராத்தில் களமிறங்கும் கூகுள் நிறுவனம்


பாடத்திட்டம் தொடர்பாக ஏற்கனவே இரண்டு சர்ச்சைகள்


“இந்தப் பாடம் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமானது, அதில் தேர்ச்சி பெறுவது அவசியம். ஆனால், உயர்நிலைப் பள்ளி மற்றும் இடைநிலைத் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியலில் மதிப்பெண்கள் சேர்க்கப்படாது” என்று உபி வாரியச் செயலர் திப்யகாந்த் சுக்லா கூறினார். உத்தரபிரதேசத்தில் இரண்டு சமீபத்திய சர்ச்சைகள் - இரண்டும் NCERT பாடப் புத்தகங்கள் தொடர்பானவை. ஒன்று 'மகாத்மா காந்தியின் படுகொலை மற்றும் ஆர்எஸ்எஸ் மீதான தடை' பற்றிய பத்திகளை நீக்க என்சிஇஆர்டியின் முடிவு, மற்றொன்று, கீழ் வகுப்புகளில் இருந்து சில பகுத்தறிவு பாடங்களை நீக்கி, உயர் வகுப்புகளுக்கு மாற்றியது ஆகும்.



காங்கிரஸ் விமர்சனம்


புதிய பாடத்திட்டத்திற்கு நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் விஜய் கிரண் ஆனந்த் தெரிவித்தார். மாநிலத்தின் காங்கிரஸின் ஊடக ஒருங்கிணைப்பாளர் அன்ஷு அவஸ்தி சாவர்க்கரைச் சேர்த்ததை விமர்சித்தார்: “பாஜக அரசாங்கம் பாடத்திட்டத்தில் சாவர்க்கரைச் சேர்த்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.... பண்டிட் நேரு சுதந்திரப் போராட்டத்தில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்தார், ஆனால் உ.பி. பாடநூல் வாரியம் அவரைப் புறக்கணித்தது... ஆங்கிலேயர்களுடன் நின்று, இந்தியாவின் சுதந்திரத்தை எதிர்த்த ஒருவரும், மன்னிப்புக் கடிதம் எழுதி, தன்னை ஆங்கிலேயர்களுக்கு மிகவும் கீழ்ப்படிந்த வேலைக்காரன் என்று சொல்லிக் கொண்ட ஒருவருமான சாவர்க்கரை உள்ளடக்கியுள்ளது," என்றார். "பாடத்திட்டங்கள் வல்லுநர்களால் வடிவமைக்கப்பட வேண்டும், அரசியல் வித்தைகளுக்கு அதில் இடமில்லை" என்று உ.பி. மத்தியமிக் ஷிக்ஷக் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.மிஸ்ரா கூறினார்.