பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொடுத்த பரிசு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் வைரலாகியுள்ளது.


தொழில் நிறுவன தலைவர்கள் உடன் ஆலோசனை:


அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதன்படி, அந்நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகள் உடன் மோடி மற்றும் அதிபர் பைடன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அப்போது, எதிர்கால தொழில்நுட்பங்களை நாட்டின் வளர்ச்சிக்காக எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதில் கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் சிஇஒ சத்ய நாதெல்லா, ஆப்பிள் சிஇஒ டிம் குக், ஓபன்ஏஐ சிஇஒ சாம் ஆல்ட்மேன், ஏஎம்டி சிஇஒ லிசா சு மற்றும் விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  






பைடன் கொடுத்த பரிசு:


கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் பைடன், சிவப்பு நிறத்திலான டி-ஷர்ட் ஒன்றை பரிசாக வழங்கினார். அதில் “The Future is AI America & India ” என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்படி வருங்கால தொழில்நுட்பம் என்பது செயற்கை நுண்ணறிவு தான் எனவும், அதில் கோலோச்சப்போவது இந்தியா மற்றும் அமெரிக்கா தான் என்றும் பைடன் சூசகமாக வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.


மோடி சொன்ன விளக்கம்:


இதனிடையே அந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, ”கடந்த சில ஆண்டுகளில், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதே நேரத்தில், மற்றொரு AI- அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இன்னும் முக்கியமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது" என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


மோடி ஆலோசனை:


தொடர்ந்து கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை மற்றும் போயிங் நிறுவன தலைமை செயல் அதிகாரி உள்ளிட்டோருடன் தனித்தனியாக மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்ததோடு, தொழில் நிறுவனங்களுக்கு இந்தியாவில் உள்ள சாதகமான சூழல் தொடர்பாகவும் மோடி எடுத்துரைத்தார்.


குஜராத்தில் பிண்டெக் மையம்:


சந்திப்பு தொடர்பாக பேசிய சுந்தர் பிச்சை “அமெரிக்காவிற்கு வரலாற்று சிறப்புமிக்க பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையாக இருந்தது. இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டாலர்களை கூகுள் முதலீடு செய்வதை பிரதமருடன் பகிர்ந்து கொண்டோம். குஜராத்தின் கிப்ட் நகரில் எங்களின் உலகளாவிய ஃபின்டெக் (fintech) செயல்பாட்டு மையத்தை திறக்க உள்ளோம். டிஜிட்டல் இந்தியாவுக்கான பிரதமரின் தொலைநோக்கு பார்வை அவரது காலத்தை விட முன்னோடியாக இருந்தது. இதனை மற்ற நாடுகள் செய்ய விரும்பும் ஒரு வரைபடமாக நான் இப்போது பார்க்கிறேன்” என கூறினார்.