வளைகுடா நாடுகளில் மிகவும் முக்கியமான நாடுகளில் ஓமன் குறிப்பிடத்தக்கத்தது. ஓமன் கடற்பரப்பானது முக்கியமான கடல்வழி வர்த்தக வழித்தடம் ஆகும். அந்த வழித்தடத்தில் சரக்கு கப்பல்கள் அடிக்கடி பயணித்து வருகின்றனர். அந்த வகையில், ப்ரீஸ்டீஜ் பால்கன் என்ற 117 மீட்டர் நீளம் கொண்ட எண்ணெய் கப்பல் நேற்று ஏமன் நாட்டில் உள்ள துறைமுகத்திதை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.
கடலில் மாயமான 10 பேர் மீட்பு:
அப்போது, ஓமன் நாட்டில் எதிர்பாராதவிதமாக இந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்தது. இந்த கப்பலில் பணியாற்றிக் கொண்டிருந்த 13 இந்தியர்கள், 3 இலங்கையர்கள் என மொத்தம் 16 பேர் மாயமானார்கள். இதையடுத்து, இந்த தகவல் கடற்படை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்தது யார்?
இதையடுத்து, மாயமான இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல் இறங்கியது. அவர்களது தீவிர தேடுதல் பணியில் மாயமான 10 பேர் மீட்கப்பட்டனர், அவர்களில் 9 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர். துரதிஷ்டவசமாக மாயமானவர்களில் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் இந்தியாவைச் சேர்ந்தவரா? அல்லது இலங்கையைச் சேர்ந்தவரா? என்பது குறித்து அறிவிக்கவில்லை. குழுவில் மாயமான மற்ற நபர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடலில் தட்பவெப்ப நிலையும், சூறைக்காற்றும் மிகவும் மோசமான சூழலில் இருப்பதால் மாயமானவர்களை தேடும் பணி சவால் மிகுந்ததாக மாறியுள்ளது.
ஓமன் நாட்டின் ராஸ் மட்ரகாவில் இருந்து தென்கிழக்கே 25 நாட்டிக்கல் மைல் தொலைவில் கவிழ்ந்த இந்த எண்ணெய் கப்பல் கொமாரஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். மாயமானவர்களை இந்திய கடற்படையுடன் ஓமன் நாட்டு அதிகாரிகளும் இணைந்து தேடி வருகின்றனர். மீட்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் ஓய்வில் உள்ளனர். மீட்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அவர்கள் மீட்கப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க: Watch Video: சேட்டை! அந்தரத்தில் தொங்கி அட்ராசிட்டி செய்த சுட்டிக்குழந்தை - நீங்களே பாருங்க
மேலும் படிக்க: Linguistic States: மொழிவாரியாக பிரிக்கப்பட்ட மாநிலங்கள்! உயிர்த்தியாகம் முதல் சட்டப்போராட்டம் வரை..!