இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, 500க்கும் மேற்பட்ட மன்னர் மாகாணங்களில் ஜம்மு காஷ்மீர் , ஹைதராபாத் உள்ளிட்ட சில மன்னர் மாகாணங்கள் இந்தியாவுடன் சேர்வதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், சில காலங்களுக்கு பிறகு, இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
மொழிவாரியிலான கோரிக்கை:
ஆரம்பத்தில், இந்தியாவில் மாநிலங்களின் உருவாக்கமானது மொழியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படவில்லை. ஆனால், அரசியல் மற்றும் வரலாற்றுக் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. சில காலத்திற்குப் பிறகு, பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று மக்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன.
மேலும், நாட்டின் பிராந்தியங்கள் பல மொழிகள் பேசுவதால், மொழிவாரியாக மாநிலங்களை அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழ ஆரம்பித்தது. இதன் விளைவாக, பல குழுக்கள் உருவாக்கப்பட்டு, ஆராயப்பட்டு, சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன, அதன் அடிப்படையில் இந்தியாவில் மாநில உருவாக்கம் அமைந்தது. இதில், மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டதன் வரலாற்ற நிகழ்வுகளை காண்போம்.
தார் கமிசன்:
ஜூன் 17, 1948 இல், மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களை அமைக்க வேண்டியதன் அவசியத்தை ஆராய அரசியல் நிர்ணய சபையால், தார் கமிசன் அமைக்கப்பட்டது. அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.தார் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த ஆணையம் டிசம்பர் 10, 1948 அன்று, ஆணையம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. தார் ஆணையம் மொழியின் அடிப்படையில் மறுசீரமைப்பு யோசனையை நிராகரித்தது. மேலும் வரலாற்று மற்றும் புவியியல் கருத்தாய்வு உட்பட நிர்வாக வசதியின் அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கத்தை பரிந்துரைத்தது.
ஜேவிபி குழு:
இதையடுத்து, 1948 டிசம்பரில், இந்திய மாநிலங்களை மொழிவாரியாக மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தை மறுபரிசீலனை செய்யவும், தார் கமிஷன் பரிந்துரைகளை ஆய்வு செய்யவும் ஜே.வி.பி குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழுவில் ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீதாராமையா ஆகியோர் இருந்தனர். குழு தனது அறிக்கையை ஏப்ரல் 1949 இல் சமர்ப்பித்தது, அதன்படி மொழி அடிப்படையில் பிரிக்கும் திட்டம் நிராகரிக்கப்பட்டது.
இந்தியாவில் மொழிவாரிப் பிரிவின் அடிப்படையில் மாநிலம் அமைக்கும் திட்டத்தை அரசு நிராகரித்ததால், பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. காலப்போக்கில் போராட்டம் தீவிரமடைந்தது. அப்போதைய மெட்ராஸ் பிரசிடென்சியில் இருந்த தெலுங்கு மொழி பேசும் மக்களிடமிருந்து மிகவும் தீவிரமான எதிர்ப்பு வந்தது.
1952 பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, இப்பகுதி மக்கள் நேருவுடன் தங்கள் கருத்து வேறுபாடுகளை கருப்புக் கொடியுடன் காட்டி, தெலுங்கு பேசும் மக்களுக்கு ஆந்திரா தனி மாநில கோரிக்கையை எழுப்பினர்.
உண்ணாவிரதப் போராட்டம்:
அக்டோபரில், மூத்த காந்தியவாதியான பொட்டி ஸ்ரீராமலு என்ற நபர், தெலுங்கு மொழி பேசுபவர்களுக்கு ஆந்திரா தனி மாநிலம் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். வேலை நிறுத்தம் 58 நாட்களாக நீடித்தது. ஆதரவிற்காக அதிகமான மக்கள் திரண்டனர், பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. அப்போது , டிசம்பர் 15, 1952 அன்று, பொட்டி ஸ்ரீராமலு உண்ணாவிரதப் போராட்டத்தால் மரணமடைந்தார். இதையடுத்து போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், அவர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலம் மொழி அடிப்படையில், 1953 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. மொழிவாரியாக உருவாக்கப்பட்ட முதல் மாநிலம் இதுவாகும்.
மொழிவாரி மாநிலமான ஆந்திரப் பிரதேசம் உருவானவுடன், இந்தியாவில் மொழி அடிப்படையில் மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமானது.
ஃபாசில் அலி ஆணையம்:
1953 டிசம்பரில், ஜவஹர்லால் நேரு புதிய கோரிக்கைகளை ஆய்வு செய்ய மாநில மறுசீரமைப்பு ஆணையத்தை உருவாக்கினார். இந்த ஆணையத்தில் ஃபாசில் அலி, எச்.என்.குன்ஸ்ரு மற்றும் கே.எம். பணிக்கர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்
மாநில மறுசீரமைப்பிற்கான அடித்தளமாக மொழியானது அடிப்படையாக ஏற்றுக்கொள்ளப்பட்து. இருப்பினும், ‘ஒரு மொழி, ஒரே மாநிலம்’ என்ற கோட்பாட்டை அது நிராகரித்தது.
இதையடுத்து மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956ன் கீழ் இந்திய மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் எல்லைகள் மொழிவாரியாக அமைக்கப்பட்டன.
image credits: @ pixabay
மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாநிலங்கள்:
ஆந்திரப் பிரதேசம், அசாம், பீகார், பம்பாய், ஜம்மு காஷ்மீர், கேரளா, மத்திய பிரதேசம், மெட்ராஸ், மைசூர், ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டன.
யூனியன் பிரதேசங்கள்:
அந்தமான் நிக்கோபார் தீவுகள்,டெல்லி, ஹிமாச்சல பிரதேசம், லட்சத்தீவுகள் மற்றும் மினிக்காய் தீவுகள், மணிப்பூர், திரிபுரா ஆகியவை மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களாகும்.