ஒருவர் பெயரில் 10 அல்லது அதற்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் வைத்திருந்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு.
தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய வியாபார யுக்திகளை பெருக்க பல ஆஃபர்களை வாரி இறைத்து வருகிறது. அந்த வகையில் சிம்கார்டுகள் பல நிறுவனங்கள் இலவசமாக வழங்கி வருகிறது. ஃப்ரீயாதானே கிடைக்கிறது என்ற எண்ணத்தில் வாடிக்கையாளர்களும் பல சிம்கார்டுகளை வாரிக்குவிக்கின்றனர்.
இதை பயன்படுத்திக்கொள்ளும் சில குற்றவாளிகள் சிம்கார்டுகளை குற்றச்செயல்களுக்கு பயன்படுத்திவிட்டு தூக்கி வீசி விடுகின்றனர். இதனால் நாட்டில் பல குற்ற சம்பவங்களுக்கு தொலைபேசியே காரணமாக இருக்கிறது. இந்நிலையில் இதை தடுக்கும் விதத்தில் மத்திய அரசு புது சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் கொண்டுவந்துள்ள புதிய நெறிமுறைகளில் ஒருவர் அதிகபட்சமாக 9 சிம்கார்டுகளை மட்டுமே தனது பெயரில் வைத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் தனது பெயரில் 10 சிம்கார்டுகளோ அல்லது அதற்கு மேற்பட்டோ வைத்திருந்தால் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம்வரை அபராதம் விதிக்க முடியும். அதேபோல் அசாம், ஜம்மு காஷ்மீர் போன்ற பதற்றமான மாநிலங்களில் ஒருவர் அதிகபட்சமாக 6 சிம்கார்டுகள் மட்டுமே தங்களது பெயர்களில் வைத்திருக்க முடியும் என புதிய சட்டம் சொல்கிறது.
ஒருவர் அதிகமான சிம்கார்டுகள் வைத்திருந்து முதல் முறை பிடிபட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதன்பின்னரும் குற்றம் தொடருமானால் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுமாம். இதேபோல் ஒருவரை ஏமாற்றி அவர்களின் ஆவணங்களை பயன்படுத்தி சிம்கார்டுகள் உபயோகப்படுத்தியது தெரியவந்தாலோ சட்டவிரோதமாக வயர்லெஸ் கருவி வைத்திருந்தாலோ, தொலைதொடர்பு சேவைகளை தடை செய்யும் சாதனங்கள் வைத்திருந்தாலோ அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
இதுமட்டுமில்லாமல் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும் சில விதிகளை இந்த சட்டம் அமல்படுத்துகிறது. அதாவது வணிக செய்திகளை பயணரின் அனுமதி இன்றி அனுப்பினால் அந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துஉ ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் சேவைகளை வழங்க தடையும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.