நாகாலாந்தில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி மற்றும் பா.ஜ.க கூட்டணி 50 இடங்கள் பெற்று முன்னிலை வகிக்கிறது.
மேகாலயா மற்றும் நாகலாந்து சட்டமன்றங்களில் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், இருமாநிலங்களுக்கும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல் திரிபுரா மாநிலத்திலும் ஒரே கட்டமாக 60 தொகுதிகளுக்கு கடந்த 16ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
நாகலாந்து தேர்தல்:
60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியை சேர்ந்த நெய்பியு ரியோ ஒன்பதாவது முதலமைச்சராக உள்ளார். ஏற்கனவே நாகாலாந்தில் பா.ஜ.க மற்றும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி தான் நடைபெறுகிறது. அதே போல் இந்த முறையும் இரண்டு கட்சிகளும் இணைந்து தேர்தல் களத்தை சந்தித்தனர். காங்கிரஸ் கட்சி தனித்து களம் கண்டது.
59 தொகுதிகளில் 183 வேட்பாளர்கள் களம் கண்டனர். ஜுன்ஹிபோட்டோ மாவட்டத்தில் உள்ள அகுலுட்டோ தொகுதியில் பாஜகவை சேர்ந்த கஜிட்டோ கினிமா எனும் வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு 2,291 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
நாகாலாந்தில் ஆட்சி அமைக்க குறைந்தது 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். காலை 9.30 மணி நிலவரப்படி தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி மற்றும் பா.ஜ.க கூட்டணி 50 இடங்கள் பெற்று முன்னிலை வகிக்கிறது. அதேபோல் காங்கிரஸ் ஒரு இடமும், நாகா மக்கள் கட்சி 6 இடங்களும், பிற கட்சிகள் 3 இடங்களும் பெற்றுள்ளது.
ஏற்கனவே வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில் நாகாலாந்தில் மீண்டும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி மற்றும் பா.ஜ.க கூட்டணி மாபெரும் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது காங்கிரஸை பின்னுக்கு தள்ளி பா.ஜ.க கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
மூன்று மாநில தேர்தலில் 19 ஆயிரம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் பாதுகாப்பு பணிகளுக்காக மாநில போலீசாருடன் இணைந்து, 119 கம்பெனி மத்திய ஆயுதப்படையினரும் களத்தில் உள்ளனர்.