வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலந்திலும் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.


திரிபுரா தேர்தல்:


திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16-ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாகலாந்து தேர்தல்:


மேகாலயா மற்றும் நாகலாந்து சட்டமன்றங்களில் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், இருமாநிலங்களுக்கும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியை சேர்ந்த நெய்பியு ரியோ ஒன்பதாவது முதலமைச்சராக உள்ளார். 59 தொகுதிகளில் 183 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஜுன்ஹிபோட்டோ மாவட்டத்தில் உள்ள அகுலுட்டோ தொகுதியில் பாஜகவை சேர்ந்த கஜிட்டோ கினிமா எனும் வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 2,291 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.


மேகாலயா தேர்தல்:


மேகாலயாவிலும் மொத்தமுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் 59 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றதுமாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் தேசிய மக்கள் கட்சி போராடி வரும் நிலையில், பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளும் ஆட்சியை பிடிக்க தீவிரம் கட்டி வருகின்றன. இந்த தேர்தலில் வாக்களிக்க 21 லட்சத்திற்கும் அதிகமானோர் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 3,419 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டது. மேகாலயாவில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் சோகியாங் தொகுதி ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான லிங்டோவின் திடீர் மரணத்தால் அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.


பாதுகாப்பு ஏற்பாடுகள்:


19 ஆயிரம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் பாதுகாப்பு பணிகளுக்காக மாநில போலீசாருடன் இணைந்து, 119 கம்பெனி மத்திய ஆயுதப்படையினரும் களத்தில் உள்ளனர். 


வாக்கு எண்ணிக்கை:


இந்நிலையில் நாகாலந்து, திரிபுரா மற்றும் மேகாலயா உள்ளிட்ட 3 மாநிலங்களிலும், இடைத்தேர்தல் நடந்த சட்டசபை தொகுதிகளிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை மையங்கள் அனைத்தும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில் மாலை 3 மணி அளவில் வெற்றிப்பெற்று ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது தெரிய வரும். 3 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி  முடிவுற்ற நிலையில், தேர்தல் பிந்தைய கணிப்பை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதில் மூன்று மாநிலங்களிலுமே பா.ஜ.க பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது. காலை 10 மணியளவில் வெற்றிப்பெறப்போகும் வேட்பாளர் யார் என்று தெரிய வரும்.