பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளிலும் நாளை மறுநாள் ஒரேகட்டமாக வாக்கப்பதிவு நடைபெறுவதை அடுத்து தேர்தல் பிரச்சாரங்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன. இந்நிலையில், வெளிமாநிலத்தில் இருந்து வரும் பஞ்சாப் மாநிலத்துக்கு வரும் புலம்பெயர்த் தொழிலாளர்கள் குறித்த தமது கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதாக முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த புதன்கிழமை பஞ்சாபில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்குழு கூட்டத்தில் பிரியங்கா காந்தி, சரண்ஜித் சிங் சன்னி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். பிரியங்கா காந்தியுடன் மேடையை பகிர்ந்துக் கொண்டு பேசிய சன்னி," பிரியங்கா காந்தி பஞ்சாபின் மருமகள். பஞ்சாபிகளின் மருமகள். ஆனால், பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து, எங்களை ஆழ முடியாது. அதை, நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.
இந்த, தர்மசங்கடமான கருத்தை எதிர்கொண்ட பிரியங்கா காந்தி செய்வதறியாது திகைத்தார். இருந்தாலும், எந்த உணர்வையும் பெரிதாக வெளிப்படுத்தாமல், சிறு புன்னகையுடன் விஷயத்தைக் கடந்து சென்றார். உத்தர பிரதேசத்தில் மூன்றாம் கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரங்கள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. எனவே, பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் சன்னியின் இந்த கருத்தை மிகப்பெரும் அரசியல் விவாதமாக மாற்றியுள்ளன.
நேற்று, பஞ்சாபில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய நரேந்திர மோடி, "முதல்வர் சன்னியின் கருத்து பஞ்சாபின் ரவிதாசியா மக்களுக்கு எதிரானது. ரவீந்திர தாஸ் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவரா? உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியமான வைணவ பக்தரான ரவிதாசரை, பஞ்சாப் மக்கள் ஆன்மீகக் குருவாக ஏற்றுக் கொண்டுள்ளனர். பிப்ரவரி 16 அன்று ஸ்ரீ குரு ரவீந்திர தாஸ் பிறந்த நாள் விழாக்களில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் பஞ்சாபிலிருந்து வாரணாசிக்கு செல்கின்றனர்" என்று தெரிவித்தார்.
13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பக்தி இயக்கத் துறவியான ரவிதாசரை பஞ்சாபில் உள்ள தலித் சீக்கியர்கள் தங்களது ஆன்மீகக் குருவாக ஏற்றுள்ளனர். தனி சடங்கு மரபுகளை முன்னிறுத்தி, சீக்கியத்தில் இருந்து விடுபட்டு 'ரவிதாசிய' என்ற தனித்துவ சமய அடையாளத்தை கோரி வருகின்றனர். பஞ்சாப் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள பல்லான் கிராமத்தில் ரவிதாசரின் புனித தளம் (குருத்வாரா) அமைந்துள்ளது. பஞ்சாப் தலித் மக்களின் மெக்காவாக இது பார்க்கப்படுகிறது. 'ரவிதாசியாக்கள்' நேரடியாக எந்தவொரு அரசியல் கட்சிகளையும் ஆதரிப்பதில்லை. இருப்பினும், ஓவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் அரசியல் தலைவர்கள் ரவிதாசரின் புனித தளத்திற்கு வருகை தருவது இன்றியாயமையாதாக உள்ளது. ஆரம்பக்கட்டத்தில், குரு ரவிதாசரின் போதனைகளை பின்பற்றுபவர்களாக இருந்தாலும், சீக்கிய மதத்தின் கூறுகளையும் இணைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், கடந்த 2009ம் ஆண்டு, வியன்னாவில், சில மத அடிப்படைவாதிகள், ரவிதாசர் புனிதத் தளத்தை தாக்கியப் பிறகு, இவர்கள் சீக்கிய சமயத்துடனான உறவை முறித்துக் கொண்டனர். அதன் பின், ரவிதாசர் குருத்வாராக்களில், சீக்கிய சம்யநூலான குருகிராந்த சாகிப்-ஐ கைவிட்டு,தங்களுக்கு சொந்தமாக உருவாக்கப்பட்ட அமிர்த்பானி மூலம் இறைவனை தொழுகின்றனர்.
இந்நிலையில், தனது கருத்து தவறுதலாக புரிந்துக் கொள்ளப்பட்டதாக சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தெரிவிக்கையில், "எனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. வளர்ச்சிக்கானப் பாதையில் பஞ்சாப் முன்னேறிச் செல்வதற்கு புலம்பெயர்த் தொழிலாளர்களின் உழைப்பு இன்றியமையாதது. அவர்கள் மீது எங்களுக்கு அன்பு மட்டுமே உள்ளது, அதை யாராலும் மாற்ற முடியாது" என்று தெரிவித்தார். வெளி மாநிலங்களில் இருந்து வந்து இங்கு இடையூறு விளைவிப்பவர்களைப் பற்றி நான் பேசினேன் என்றும் அவர் மேலும் கூறினார்.
பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரும், புலம்பெயர்த் தொழிலாளர்கள் பற்றிய கருத்துக்கு கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரையில், நாளை மறுநாள் வாக்குப்பதிவு (20 பிப்ரவரி, 2022 (ஞாயிறு) - நடைபெறுகிறது. 10 மார்ச், 2022 (வியாழன்) அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மேலும், வாசிக்க: