பிப்ரவரி 16 அன்று, குரு ரவிதாசர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான  வாக்குப்பதிவு தேதியை பிப்ரவரி 20ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.  


மாநில அரசு, பஞ்சாப் அரசியல் கட்சிகள், இதர அமைப்புகள் ஆகியவவை ஒரே குரலில் தேர்தல் ஆணையத்தின் கவனத்தை ஈர்த்து பல முறையீடுகளை அனுப்பியதன் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஜனநாயகத் தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதுவும், ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்ற வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராத்திற்கு பிறகு நடைபெறும் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தங்களது எதிர்ப்புகளையும், எதிர்பார்ப்புகளையும் வெளிபடுத்தும் வாய்ப்பாக உள்ளது. 


இஸ்லாமியர்களின் புனிதவிழாவான ரம்ஜான் பண்டிகைக்கு இடையே 2019 மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றளவிலே இஸ்லாமியர்கள் கோரிக்கை வைத்தனர். இந்திய ஜனநாயக அமைப்பின் பால் அவர்கள் கொண்ட நம்பிக்கையை காட்டுகிறது. 




 


ஆனால், 'ஜனநாயக அரசியலுக்கு முன்னோடியானது சமய உணர்வு' (religious existence proceeds political essence) என்ற தத்துவத்தை பஞ்சாப் அரசியல் முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்கிறது. சமூக நீதி, சாதி ஒழிப்பு, பெண்ணிய விடுதலை  போன்ற போராட்டங்கள் அரசியலுக்குள் வராமல், சமய நிறுவனங்களுக்குள்  அகப்பட்டுள்ளன. அதற்கான, காரணங்களையும், தமிழ்நாடு- பஞ்சாப் தலித் அரசியல்களுக்கு இடையே முரண்பாடுகளையும் இங்கே காணலாம்.  


குரு ரவிதாசர்:


13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பக்தி இயக்கத் துறவியான ரவிதாசரை பஞ்சாபில் உள்ள தலித் சீக்கியர்கள் தங்களது ஆன்மீகக்  குருவாக ஏற்றுள்ளனர். தனி சடங்கு மரபுகளை முன்னிறுத்தி, சீக்கியத்தில் இருந்து விடுபட்டு 'ரவிதாசிய' என்ற தனித்துவ சமய அடையாளத்தை கோரி வருகின்றனர். பஞ்சாப் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள பல்லான் கிராமத்தில்  ரவிதாசரின் புனித தளம் (குருத்வாரா) அமைந்துள்ளது.  பஞ்சாப் தலித் மக்களின் மெக்காவாக இது பார்க்கப்படுகிறது.


'ரவிதாசியாக்கள்' நேரடியாக எந்தவொரு அரசியல் கட்சிகளையும் ஆதரிப்பதில்லை. இருப்பினும், ஓவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் அரசியல் தலைவர்கள் ரவிதாசரின் புனித தளத்திற்கு வருகை தருவது இன்றியாயமையாதாக உள்ளது.    


ரவிதாசியாக்கள் உருவானது எப்படி?    


பஞ்சாபில் மசாபி சீக்கியர்கள், ஆதி சாமர்கள் என இரண்டி பெரிய தலித் அமைப்பினர் காணப்படுகின்றன. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியமான வைணவ பக்தரான ரவிதாசர் சாமர் சமூகத்தில் பிறந்தார். பஞ்சாபின் தோபா பகுதியில், இவரை ஆன்மீகக் குருவாக ஏற்றுக் கொண்டவர்கள் ரவிதாசியாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.    






 


ஆரம்பக்கட்டத்தில், குரு ரவிதாசரின் போதனைகளை பின்பற்றுபவர்களாக இருந்தாலும், சீக்கிய மதத்தின் கூறுகளையும்  இணைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், கடந்த 2009ம் ஆண்டு, வியன்னாவில், சில மத அடிப்படைவாதிகள், ரவிதாசர் புனிதத் தளத்தை தாக்கியப் பிறகு, இவர்கள் சீக்கிய சமயத்துடனான உறவை முறித்துக் கொண்டனர். அதன் பின், ரவிதாசர்  குருத்வாராக்களில், சீக்கிய  சம்யநூலான குருகிராந்த சாகிப்-ஐ கைவிட்டு,தங்களுக்கு சொந்தமாக உருவாக்கப்பட்ட அமிர்த்பானி மூலம் இறைவனை தொழுகின்றனர். 






குரு ரவிதாசரின் பிறந்த இடம், கோடிக்கணக்கான மக்களுக்கு புனித தலமாக விளங்குகிறது. ஆண்டுதோறும் அவர் பிறந்த நாள் விழாக்களில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் பஞ்சாபிலிருந்து வாரணாசிக்கு வந்து செல்கின்றனர். வாரணாசியில், அவர் பிறந்த இடத்தை அழகுபடுத்தி புனித ஆலயம் அமைக்க வேண்டும்  என்பது இம்மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. 


ரவிதாசியாக்கள் அரசியல் :


பஞ்சாப் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையான 2.77 கோடியில், இந்து மற்றும் சீக்கிய சமயம் சார்ந்த தலித் சமூகத்தினரின் மக்கள் தொகை 88.60 இலட்சமாக ஆக உள்ளது. இது பஞ்சாப் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 31.91% விழுக்காடாகும். இதில், ரவிதாசியாக்களின் எண்ணிக்கை மட்டும் 12 இலட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. தோபா பகுதியில் மட்டும் இவர்களின் எண்ணிக்கை 65% ஆக உள்ளது. 


கிட்டத்தட்ட, பஞ்சாப் தோபா பகுதியில் (நான்கு மாவட்டங்களை உள்ளடக்கியது) மொத்தமுள்ள 23 தொகுதிகளில்,15 தொகுதிகளில்  தலித் மக்கள் கணிசமாக வாழ்கின்றனர்.  மேலும், மாநிலத்தின் மொத்த தொகுதிகளில், 34 இடங்கள் பட்டியலின் மக்களுக்காக ஓதுக்கப்பட்டுள்ளது.        


தமிழ்நாடு- பஞ்சாப் தலித் அரசியல் ஒப்பீடு: 


தமிழ்நாடு மற்றும்  பஞ்சாப் அரசியலில் சில அடிப்படை ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் நிலவுகின்றன. உதாரணமாக, அகாலி- திராவிட இயக்கங்கள் இரண்டுமே இருபதாம் நூற்றாண்டில் தோன்றியவை. இந்து மதம், இந்திய தேசியம் என்ற பெருஞ்சொல்லாடல்களை இரண்டு இயக்ககளுமே புறக்கணித்தன. இரண்டு இயக்கங்களுக்குமே நிலவுடமை எதிர்ப்பு என்பது அடிப்படையாக அமைத்தது. 


ஆனால், பஞ்சாபைவிட தமிழ்நாட்டில் தலித் பிரிவினர் மிகத் தீவிரமாக தங்களை அரசியல்படுத்திக் கொண்டனர் என்று சொல்லலாம். உதாரணமாக, 32% தலித் மக்கள் கொண்ட ஒரு மாநிலத்தில்  தற்போது தான், அந்தப் பிரிவை சேர்ந்த ஒருவர் மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். 




ஆனால், ஒப்பீட்டளவில் தமிழகத்தை விட, பஞ்சாபில் தலித் மக்கள் மீதான சாதிய வன்முறைகள் குறைந்து காணப்படுகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை விட, பஞ்சாபில் தலித் பொருளாதார அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். 


பெரியார் கடவுள் எதிர்ப்பு, புராண எதிர்ப்பு, நாத்திகீ சொல்லாடல்கள் மூலம் சமூக நீதிக்கான அரசியல் முன்னெடுத்தார். ஆயுனும், தமிழகத்தில் நில உடமை  எதிர்ப்பு ஒரு போராட்ட சக்தியாக உருப்பெறவில்லை. அதன் காரணமாக, தலித் மக்கள் மீதான வன்முறை கட்டமைப்பை உடைக்கவில்லை.    


ஆனால், பஞ்சாபில் சமய உணர்வை ஆதாரமாகக் கொண்டு தான் தலித்மக்கள் தங்கள் அரசியலை முன்னெடுக்கின்றனர். சமய உணர்வை மையப்படுத்தியே பிற்படுத்தப்பட்டோர் ஒன்று கூடுகின்றனர். எடுத்துக் காட்டாக, பஞ்சாபில் தலித் மக்கள் இட ஒதுக்கீட்டு அரசியல் வெகு தீவிரமாக நடத்தியதாக இதுவரை தெரியவில்லை. 




அங்குள்ள மக்கள், ஆதிக்கத்தில் இருந்தும், சுரண்டலில் இருந்தும்  மீண்டு வர சமய நிறுவனங்களைத் தேடி செல்கின்றன. குருத்வாரம் என்பதே நிலவுடைமை சமூகத்துக்கு எதிரான வெற்றியாக பார்க்கப்படுகிறது. சமூகத்தில் அமுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு அதிகாரமளிக்கும் இடமாக விளங்கி வருகின்றன. இதன் காரணமாக, தேரா சச்சா  போன்ற ஆயரக்கணக்கான சமய நிறுவனங்கள் அங்கு வளர்ச்சியடைந்துள்ளன.  


இவர்கள், தங்களை அம்பேத்கர்வாதிகளாக கருதினாலும், அம்பேத்கரின் தலித் அரசியலை உள்ளூர் நிலமைக்கு ஏற்ப மாற்றிக் கொள்கின்றன. மேலும், சாதி ஒழிப்பு அரசியல்  என்பதைத் தாண்டி ரவிதாசரின் ஆன்மீக பயணத்தில் தான் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் தலித் மக்கள் ஒரு அரசியல் இயக்க அமைப்புகளை உருவாக்கி வருகின்றனர். அரசியல் முழக்கங்களைத் தங்கள் ஆயுதமாக கொண்டுள்ளனர்.      




எனவே, இந்த அடிப்படைமுரண்பாட்டை இங்கு புரிந்து கொள்வது முக்கியமாகும். தமிழ்நாட்டின் மொழி உணர்வு அரசியலை விட, பஞ்சாபின் சமய உணர்வே அடித்தள மக்களின் உணர்வை பிரதிபலிக்கிறது? என்று எடுத்துக் கொள்வதா? இல்லை தமிழகத்திடம் இருந்து பஞ்சாப் தலித் அரசியல் பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமா? என்பதற்கு கூடுதல் விவரங்கள் தேவைப்படுகிறது. தமிழகத்தில் சாதிய வன்முறை அதிகரித்து வரும் சூழ்நிலையில் இத்தகைய விவாதங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.      


கட்டுரைக்கு உதவியவை: 


ந.முத்துமோகன் கட்டுரை: சீக்கியமும் தமிழ்பண்பாடும்   


ந. முத்துமோகன்: திருவள்ளுவரும் குருநானக்கும்