மத்திய பிரதேச அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் ஷிவ்புரியில் உள்ள மாவட்ட மருத்துவமனையின் வளாகத்தை வைப்பரை வைத்து சுத்தம் செய்யும் காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


மருத்துவமனையை சுத்தம் செய்த அமைச்சர்


மத்தியப் பிரதேச எரிசக்தி அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் , நேற்றைய தினம் வியாழக்கிழமை ஷிவ்புரி மாவட்ட மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அப்போது,அங்கு மோசமான சுகாதார நிலை குறித்து பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அவரே வைப்பர் மற்றும் கிருமிநாசினியை எடுத்து தரையை சுத்தம் செய்யத் தொடங்கினார்.


வீடியோ:


அந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் ஷிவ்புரியில் உள்ள மாவட்ட மருத்துவமனை வளாகத்தை வைப்பர் உதவியுடன் சுத்தம் செய்வதைக் பார்க்க முடிகிறது. அவருடன் மருத்துவமனையின் காவலாளியும், தோமர் சுத்தம் செய்யும் போது தரையில் கிருமிநாசினியை ஊற்றுகிறார்.


விரைந்து வந்த அதிகாரிகள்:


இதற்கிடையில், அமைச்சரின் திடீர் வருகை குறித்து தகவல் அறிந்ததும் சிவில் சர்ஜன் பிஎல் யாதவ், எஸ்டிஎம் உமேஷ் கவுரவ், கூடுதல் எஸ்பி சஞ்சீவ் முலே, கலெக்டர் ரவீந்திர குமார் சவுத்ரி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தடைந்தனர்.


இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கையில், மாநில எரிசக்தி அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் ஷிவ்புரி மாவட்ட மருத்துவமனைக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  மருத்துவ மனையை ஆய்வு செய்த அவர் வார்டில் உள்ள கழிவறை, அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் ஐசியூ வார்டு மிகவும் துர்நாற்றம் வீசுவதோடு, அசுத்தமாக இருந்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.






நடவடிக்கை:


சுகாதாரமற்று இருப்பதை கண்டு அமைச்சர், மருத்துவமனை வளாகத்தை தானே துடைப்பான் மூலம் சுத்தம் செய்தார். பின்னர், துப்புரவு நிறுவனமான சிக்மா இன்போடெக் நிறுவனத்திற்கு எதிராக கோட்வாலி காவல் நிலையத்தில்  இரவே புகார் அளித்ததையடுத்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


இதையடுத்து மாவட்ட மருத்துவமனையின் செயல்பாட்டை மேம்படுத்துமாறு ஆட்சியர் ரவீந்திர குமார் சவுத்ரியிடம் அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் கூறியுள்ளார்.


Video: அமெரிக்காவிலுள்ள புயலை வீடியோ எடுத்த சர்வதேச விண்வெளி நிலையம்.! வியக்க வைக்கும் காட்சி.!