மும்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவு அமைப்புகள் எச்சரித்துள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.


நாட்டின் வர்த்தக தலைநகராக உள்ள மும்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. இந்த நிலையில், மும்பையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.


உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தில் மும்பை:


மும்பையில் வழிபாட்டுத் தலங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. வழிபாட்டு தலங்களிலும் நெரிசல் மிகுந்த இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அந்தந்த மண்டலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிறப்பு கவனம் செலுத்துமாறு நகரத்தின் துணை போலீஸ் கமிஷனர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தேகத்திற்கிடமான செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு நகரத்தில் உள்ள கோவில்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுகுறித்து சித்திவிநாயகர் கோவில் அறக்கட்டளை தலைவர் சதா சர்வாங்கர் கூறுகையில், "கோயிலின் பாதுகாப்பை அதிகரிக்க மும்பை போலீசார் எங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளோம்" என்றார்.


பண்டிகை காலத்தில் பதற்றம்:


இரண்டு பிரபலமான வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள க்ராஃபோர்ட் மார்க்கெட் பகுதியில் நேற்று போலீஸார் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொண்டனர். இருப்பினும், இது பண்டிகை காலத்தை முன்னிட்டு நடத்தப்படும் பாதுகாப்பு ஒத்திகை என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.


மும்பையில் இந்த மாதம் 10 நாள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இப்போது துர்கா பூஜை, தசரா மற்றும் தீபாவளிக்கு தயாராகி வருகிறது. மகாராஷ்டிராவில் தற்போது ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா - பாஜக - அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.


மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவடைவதால் அதற்கு முன்பு தேர்தல் நடத்தப்பட உள்ளது. மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தவில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா - காங்கிரஸ் - சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது.


வரும் சட்டப்பேரவை தேர்தலிலும், இந்த கூட்டணியே வெல்லும் என கூறப்படுகிறது. இருப்பினும், பாஜக கூட்டணி அதற்கு கடும் போட்டியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.