ஹரியானாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இலவச மின்சாரம், இலவச மருத்துவ சிகிச்சை, பெண்களுக்கு நிதியுதவி, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதம், சாதிவாரி கணக்கெடுப்பு உள்பட பல வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளது.


ஹரியானாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி, ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுடன் சேர்த்து, வரும் அக்டோபர் 8ஆம் தேதி, ஹரியானா தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.  


இலவச மின்சாரம்: கடந்த 10 ஆண்டுகளாக ஹரியானா மாநிலத்தை பாஜக ஆட்சி செய்து வருகிறது. 10 ஆண்டு கால பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாத அதன் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 


இந்த நிலையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. ஹரியானாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் 25 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது.


ஏழைகளுக்கு இரண்டு அறைகள் கொண்ட வீடு: ஹரியானாவில் 18-60 வயதுடைய பெண்களுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்குவதாகவும் 500 ரூபாய்க்கு காஸ் சிலிண்டர்கள் வழங்குவதாகவும் தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்துள்ளது. பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் பயிர்களுக்கு உடனடி இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


விவசாயிகள் ஆணையம் அமைத்து விவசாயிகளுக்கு டீசலுக்கான மானியம் வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ஏழை மக்களுக்கு 200 கெஜம் நிலமும், இரண்டு அறைகள் கொண்ட வீடும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.


அதேபோல, மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. கிரீமி லேயரின் வரம்பு 10 லட்சம் ரூபாயாக உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இளைஞர்களுக்கு 2 லட்சம் நிரந்தர வேலை வழங்குவதாகவும், போதையில்லா மாநிலமாக மாற்றுவதாகவும் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஹரியானா முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் ஹூடா, ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட், ஹரியானா காங்கிரஸ் கமிட்டி (HPCC) தலைவர் உதய் பன் ஆகியோர் தேர்தல் அறிக்கையை கூட்டாக வெளியிட்டர்.