கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக, தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. அடுத்த மாதம், நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், பல்வேறு நிறுவனங்கள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்கள்:
அந்த வகையில், தனியார் செய்தி நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜகவே ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 335 இடங்களில் வெல்லும் என கணிக்கப்பட்டது.
இந்த நிலையில், செல்வாக்கு மிக்க முதலமைச்சர்கள் பட்டியலை தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. மக்கள் மத்தியில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, செல்வாக்கு மிக்க முதலமைச்சர் பட்டியலில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறார். நவீன் பட்நாயக்கிற்கு ஆதரவாக 52.7 சதவிகிதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
செல்வாக்கு மிக்க முதலமைச்சர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளார். இவருக்கு ஆதரவாக 51.3 சதவிகிதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். மூன்றாவது இடத்தில் அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும், நான்காம் இடத்திம் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலும் உள்ளனர்.
ஆதிக்கம் செலுத்தும் பாஜக முதலமைச்சர்கள்:
ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு ஆதரவாக 48.6 சதவிகிதத்தினரும் பூபேந்திர படேலுக்கு ஆதரவாக 42.6 சதவிகிதத்தினரும் கருத்து தெரிவித்துள்ளனர். 5ஆவது இடத்தில் திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹா உள்ளார். இவருக்கு ஆதரவாக கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 41.4 சதவிகிதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தவிர மீதமுள்ள 4 பேரும் பாஜகவை சேர்ந்தவர்கள். நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளத்தை சேர்ந்தவர். முதல் ஐந்து இடத்தில் I.N.D.I.A கூட்டணியை சேர்ந்த எந்த முதலமைச்சரும் இடம்பெறவில்லை.
குறிப்பாக, கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டபேரவை தேர்தலில் வெற்றிபெற்று முதல்முறையாக ஆட்சி அமைத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், முதல் 5 இடத்தில் இடம்பெறாதது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அதுமட்டும் இன்றி, கடந்த 13 ஆண்டுளாக மேற்குவங்க முதலமைச்சராக உள்ள மம்தா பானர்ஜியும் முதல் 5 இடத்தில் இடம்பெறவில்லை.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, சமீபத்தில் தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்ற ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் முதல் 5 இடத்தில் இடம்பெறவில்லை.
இதையும் படிக்க: Fact Check: தமிழ்நாட்டின் முதல் பழங்குடி நீதிபதி ஸ்ரீபதி இல்லையாம்! உண்மை நிலவரம் என்ன?