திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை அடுத்த புலியூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீபதி. பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இவர், சமூக ரீதியாகவும் பொருளதார ரீதியாகவும் பல்வேறு சவால்களை கடந்து ஏலகிரி மலையில் உள்ள பள்ளியில் கல்வி கற்று பின்னர் அப்பகுதியில் பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பு படித்தார்.
தமிழ்நாட்டின் முதல் பழங்குடி நீதிபதி ஸ்ரீபதியா?
சமீபத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வில் வெற்றிபெற்று சிவில் நீதிபதியாக பயற்சி பெற உள்ளார் ஸ்ரீபதி. இதன் மூலம், தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை ஸ்ரீபதி பெற்றுள்ளதாக தகவல் வெளியானது. இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால், தமிழ்நாட்டின் முதல் பழங்குடி சிவில் நீதிபதி ஸ்ரீபதி இல்லை என்றும், அவருக்கு முன்பே பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள் நீதிபதியாக இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த 10 பேர், சிவில் நீதிபதியாக உள்ளனர் என சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே. சந்துரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விரிவாக எடுத்துரைத்த அவர், "பழங்குடியினத்தை சேர்ந்த (ST) பலர், கடந்த காலத்தில் தமிழ்நாட்டில் இந்த சாதனையை படைத்துள்ளனர். மேலும் தற்போது மாநிலத்தின் மிக மூத்த முதன்மை அமர்வு நீதிபதியான எஸ். அல்லி, பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்தான். தற்போது, சென்னை முதன்மை அமர்வு நீதிபதியாக உள்ளார்.
உண்மை நிலவரம் என்ன?
பிப்ரவரி 16ஆம் தேதி வரை, தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதித்துறையில் 10 பழங்குடியினர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் மாவட்ட நீதிபதி. நான்கு பேர் மூத்த சிவில் நீதிபதியாக உள்ளனர். 5 சிவில் நீதிபதிகள். தமிழ்நாட்டில் பணியாற்றும் துணை நீதிபதிகளில் ஒருவர் திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையை சேர்ந்தவர். தற்போது, தேர்வாகியுள்ள ஸ்ரீபதியும் அதே பகுதியை சேர்ந்தவர்தான். எனவே, இப்போதுதான் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் சிவில் நீதிபதியாக உள்ளார் என்று கூறுவது தவறு" என்றார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் நீதிபதி சந்துரு, நீதித்துறையில் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். "தமிழ்நாட்டில் பழங்குடியின பிரிவினருக்கு வழங்கப்படும் 1 சதவிகித இடஒதுக்கீட்டை கணக்கில் கொண்டாலும், சுமார் 15 மாவட்ட நீதிபதிகள் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 10 பேர் மட்டுமே உள்ளனர்.
உயர் நீதித்துறையிலும் பழங்குடி சமூகத்திற்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். கடந்த 2023ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்ற கொலீஜியமும் அத்தகைய தேவையை அங்கீகரித்துள்ளது. அதே நேரத்தில் கவுகாத்தி நீதிபதியாக ஒரு வழக்கறிஞரின் பெயரை நியமிக்க பரிந்துரைத்தது" என்றார்.