Sunny Leone: உத்தரபிரதேசத்தில் காவலர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில், சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்று உள்ளது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
உத்தரபிரதேச காவலர் தேர்வு:
உத்தரபிரதேச போலீஸ் கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு தேர்வுக்கு, நடிகை சன்னி லியோன் பெயரில் வெளியான ஹால்டிக்கெட் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த 17ம் தேதி நடைபெற்ற தேர்வுக்கான அந்த ஹால்டிக்கெட்டில், விண்ணப்பதாரருக்கு கன்னௌஜ்ஸ் திருவாவில் உள்ள ஸ்ரீமதி சோனஸ்ரீ மெமோரியல் பெண்கள் கல்லூரி தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை:
சம்பவம் தொடர்பான காவல்துறை விசாரணயில், தேர்வுக்க விண்ணப்பிக்க பயன்படுத்தப்பட்ட மொபைல் எண் உத்தரபிரதேச மாநிலத்தின் மஹோபாவில் வசிப்பவருக்கு சொந்தமானது. பதிவு படிவத்தில் வழங்கப்பட்ட முகவரி மும்பையில் உள்ளது” என தெரிய வந்துள்ளது. ஹால் டிக்கெட் போலியானது என்றும், விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும்போது நடிகையின் புகைப்படம் பதிவேற்றப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, தேர்வு நாளில் அந்த ஹால் டிக்கெட்டை பயன்படுத்தி யாரும் தேர்வு எழுத வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
120 பேர் கைது:
உத்தரபிரதேச காவல்துறை கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வு சனிக்கிழமை தொடங்கியது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு நாளும் இரண்டு ஷிப்டுகளாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வு சுமுகமாக நடைபெறுவதற்காக தேர்வு மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் 120-க்கும் மேற்பட்டோர் வேட்பாளர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் கைது செய்யப்பட்ட 122 பேரில் 15 பேர் எட்டாவில், தலா ஒன்பது பேர் மௌ, பிரயாக்ராஜ் மற்றும் சித்தார்த்தநகரில், 8 பேர் காஜிபூரில், 8 பேர் அசம்கரில், 7 பேர் கோரக்பூரில், 6 பேர், ஜான்பூரில் 5 பேர், ஃபிரோசாபாத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கௌசாம்பி மற்றும் ஹத்ராஸில் தலா மூன்று, ஜான்சி, வாரணாசி, ஆக்ரா மற்றும் கான்பூரில் தலா இரண்டு, பல்லியா, தியோரியா மற்றும் பிஜ்னூரில் தலா ஒருவரும் கைதாகியுள்ளனர்.
ஆசிரியர் தேர்வில் சன்னி லியோன்:
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2022ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்த ஒரு மாணவி தனது ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்தபோது, அதில் அவரது புகைப்படம் இடம்பெறாமல் நடிகை சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. இதுதொடர்பாக கல்லூரியில் புகாரளித்தபோது, “தேர்வு எழுதுவோர் அவர்களுக்கென தனி ஐடி உருவாக்கப்படும். அதனால் அவர்கள் என்ன புகைப்படத்தை அப்லோட் செய்கிறார்களோ அதைத் தான் கணினி ஏற்றுக்கொள்ளும். அவர்களைத் தவிர வேறு யாரும் அவர்களது ஐடியை பயன்படுத்த முடியாது. இது முழுக்க முழுக்க அந்த மாணவியின் தவறு தான்” என்று கூறி இருந்தனர். இந்நிலையில் தான், உத்தரபிரதேச காவல்துறை தேர்வுக்கான, ஹாக்ல் டிக்கெட்டிலும் சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.