உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகம் குஜராத் மாநிலம் சூரத்தில் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அமெரிக்க பாதுகாப்புத்துறையின் தலைமை அலுவகமான பென்டகனை விட பெரிதாக கட்டப்பட்டுள்ளது. அமெரிக்கா வர்ஜீனியா மாகாணத்தில் அமைந்துள்ள பென்டகன் கட்டிடம் 6.5 மில்லியன் சதுர அடியில் கட்டப்பட்டது. இந்த கட்டிடம், கடந்த 1943ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.


வியப்பில் ஆழ்ந்த உலக நாடுகள்:


சூரத்தில் இன்று திறக்கப்பட்ட வைர வர்த்தக மையம், 6.7 மில்லியன் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. உலகின் வைர வர்த்தக தலைநகராக சூரத்தை மாற்ற பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சூரத்தில் 32 பில்லியன் ரூபாய் மதிப்பில் வைர வர்த்தக மையம் கட்டப்பட்டது.


குஜராத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்ற பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இந்த வைர வர்த்தக மையம் பெரும் உந்துசக்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் இருந்துதான் வைரம் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், சூரத்தில்தான் உலகின் 90 சதவிகித வைர கற்கள் வெட்டப்பட்டு, பாலிஷ் செய்யப்படுகிறது. இங்கிருந்து கொண்டு செல்லப்படும் வைர கற்கள்தான், அமெரிக்க, சீன நாடுகளில் விற்கப்படுகிறது. எனவேதான், இந்தியாவின் வைர நகரம் என சூரத் அழைக்கப்பட்டு வருகிறது. 


பாலிஷ் செய்யப்படும் வைரத்தை நேரடியாக ஏற்றுமதி செய்யும் நோக்கில் வைர வியாபாரத்தில் மும்பையை பின்னுக்கு தள்ளும் வகையில் புதிய வைர வர்த்தக மையம் திறக்கப்பட உள்ளது.


உலகின் மிகப்பெரிய அலுவலக கட்டிடம்:


சூரத் வைர வர்த்தக மையத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் தினேஷ் நவடியா, இதுகுறித்து கூறுகையில், "முன்னதாக மும்பையில் இருந்த பல வைர வியாபாரிகள், ஏலத்திற்குப் பிறகு திறப்பு விழாவுக்கு முன்பே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகங்களுக்கு சென்றுவிட்டனர். திறப்பு விழாவிற்குப் பிறகு, சூரத் வைர வர்த்தக மைய கட்டிடம் அருகே நடைபெற உள்ள பெரிய கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார்" என்றார்.


சூரத் வைர வர்த்தக மையத்தின் தலைமை செயல் அதிகாரி மகேஷ் காத்வி கூறுகையில், "இதுவே உலகின் மிகப்பெரிய அலுவலகக் கட்டிடமாகும். இங்கு 4,500க்கும் மேற்பட்ட வைர வர்த்தக அலுவலகங்கள் உள்ளன. கரடுமுரடான வைரங்களின் வர்த்தகம் முதல் பாலிஷ் வைர விற்பனை வரை - இவை இரண்டும் இங்கு நடக்கும். 


இங்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் சுமார் 1.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய இரண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் கட்டிடத்தை உருவாக்க முயற்சித்துள்ளோம். ஒவ்வொரு அலுவலகத்திற்கும் ஃபைபர் இணைய வசதி கொடுக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், 4000க்கும் மேற்பட்ட கேமராக்கள் மற்றும் அதிநவீன கட்டுப்பாட்டு அறைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.