உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ரோஹிண்டன் நாரிமன். நாட்டின் திறமைவாய்ந்த நீதிபதிகளில் ஒருவரான ரோஹிண்டன் நாரிமன், கடந்த 2021ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். வழக்கறிஞராக பணியாற்றி வந்த ரோஹிண்டன் நாரிமன் நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தவர்.


ரோஹிண்டன் நாரிமன்:


வழக்கமாக உயர் நீதிமன்ற நீதிபதிகள்தான், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுவார்கள். ஆனால், சில சமயங்களில், தனித்த திறமையின் காரணமாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் நேரடியாக நியமிக்கப்படுவது உண்டு. அந்த வகையில், இந்திய வரலாற்றில் இதுவரை 8 வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நேரடியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


அதில் ஒருவர் ரோஹிண்டன் நாரிமன். இவர் நீதிபதியாக பொறுப்பு வகித்தபோது, பல முக்கிய வரலாற்று தீர்ப்புகளை வழங்கியுள்ளார். தனியுரிமை என்பது அடிப்படை உரிமை என்ற வரலாற்று தீர்ப்பை வழங்கிய அமர்வில் ரோஹிண்டன் நாரிமன் ஒருவர். தன்பாலினத்தவர் உறவு கொள்வது சட்டவிரோதம் அல்ல என்றும் முத்தலாகம் சட்ட விரோதம் என்றும் தீர்ப்பு வழங்கியவர் ரோஹிண்டன் நாரிமன்.


தெற்கு மும்பையில் நடந்த பன்சாரி சேத் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்ற ரோஹிண்டன் நாரிமன், பல விவகாரங்கள் குறித்து பேசினார். 


அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370:


அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ நீக்கி மத்திய அரசு எடுத்த நடவடிக்கை செல்லும் என உச்ச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பு குறித்து பேசிய அவர், "இந்த தீர்ப்பு குழப்பத்தை தருகிறது. ஜம்மு காஷ்மீரில் ஐந்து ஆண்டுகளாக ஜனநாயக அரசு தேர்ந்தெடுக்கப்படவில்லை. செப்டம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது. அதுவரை, காலவரையின்றி இதே நிலைதான் தொடரபோகிறது.


இந்த விவகாரத்தில் தீர்ப்பை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. மேலும் குழப்பத்தை விளைவிக்கிறது. ஒரு மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதற்கான நிபந்தனைகள் ஏன் கருத்தில் கொள்ளப்படாமல் தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது மேலும் கவலையளிக்கிறது" என்றார்.


இந்திய தேர்தல் ஆணையர் நியமன சட்ட திருத்தம்:


இந்திய தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பாக சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்தம் குறித்து பேசிய ரோஹிண்டன் நாரிமன், "இந்திய தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வது தொடர்பான சமீபத்திய மசோதா, சட்டமான பிறகு, அது தன்னிச்சையானது என சட்ட திருத்தத்தை நீக்க வேண்டும். அந்த சட்ட திருத்தத்தால் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் கடுமையாக பாதிக்கப்படும். அதை நீக்கவில்லை என்றால், அது ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய ஆபத்தாக மாறும்" என்றார்.


ஊடகங்களை மத்திய அரசு கட்டுப்படுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து பேசிய அவர், "ஊடகங்கள், நம்மை கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும். அது கொல்லப்பட்டால், எதுவும் மிச்சமில்லை. ஊடகங்கள் மீது தாக்குதல் நடக்கும் தருணத்தில், அதை உடனடியாக தடுக்க நீதிமன்றங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்றார்.