இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாகவும், நட்பு நாடுகளில் ஒன்றாகவும் திகழ்வது வங்கதேசம். அந்த நாட்டில் உள்ள ஆவாமி லீக் கட்சியின் எம்.பி. அன்வருல் ஆசீம் அனர். இவர் கடந்த மே 12ம் தேதி இந்தியாவிற்கு வந்தார்.
வங்கதேச எம்.பி. கொல்கத்தாவில் கொலை:
மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவிற்கு அவர் வந்திருந்தார். அவரை மே 14ம் தேதிக்கு பிறகு யாரும் பார்க்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அண்டை நாட்டு எம்.பி. என்பதால் இவர் மாயமான தகவல் குறித்து ரகசியமாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால், கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள அன்வருல் ஆசிமின் சடலம் இதுவரை கிடைக்கவில்லை. அவர் கடைசியாக தங்கியிருந்த சஞ்சீவ கார்டன் குடியிருப்பில் ரத்தக்கறைகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மருத்துவ காரணங்களுக்காக அவர் கடந்த 12ம் தேதி கொல்கத்தாவிற்கு வந்திருந்தார்.
3 பேர் கைது:
அங்கு அவர் பாராநகரில் உள்ள அவரது நண்பருக்கு சொந்தமான சஞ்சீவ் கார்டன் குடியிருப்பில் தங்கியிருந்தார். அவர் டெல்லி வந்தடைந்ததும் தனது குடும்பத்தினருக்கு தனது செல்போன் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார். கடந்த 8 நாட்களாக மாயமாகியிருந்த வங்கதேச எம்.பி. கண்டுபிடிக்கப்பட்டு விடுவார் என்று கருதிய ஆதரவாளர்களுக்கு, அவரது மரண செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வங்கதேச நாட்டு அரசுக்கும், அந்த நாட்டு காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வங்கதேச போலீசார் அந்த நாட்டில் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவிற்கு சிகிச்சைக்காக வந்த வங்கதேச எம்.பி. மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சடலம் எங்கே?
இந்த விவகாரம் தொடர்பாக மேற்குவங்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக இரு நாட்டு போலீசாரும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கதேச எம்.பி. அன்வருல் ஆசீமின் சடலத்தை கண்டுபிடிக்கும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுளளனர்.
இந்த கொலைக்கான காரணம் என்ன? மாயமான அவரது சடலம் எங்கே? 8 நாட்களாகியும் ஏன் அவரது உடலை கண்டுபிடிக்க இயலவில்லை? என்று பலவேறு கேள்விகளுக்கு விரைவில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: முந்திரி இறக்குமதியில் ஆப்ரிக்கா தொழிலதிபரிடம் ரூ.5.40 கோடி மோசடி- போலி ஆவணங்கள் மூலம் அபேஸ் செய்த கேரள வியாபாரி
மேலும் படிக்க: Crime: மாமியாரை கூலிப்படை வைத்து கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை: காரணம் என்ன..?