வெளிநாட்டில் இருந்து முந்திரி கொட்டை இறக்குமதி செய்து ரூ.5¼ கோடி மோசடி செய்ததாக கேரளாவை சேர்ந்த நிறுவனத்தின் மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாலாஜி சரவணனிடம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.




தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சமீபகாலமாக ஏற்றுமதி, இறக்குமதியில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. இந்நிலையில், ஆப்ரிக்கா நாட்டில் இருந்து முந்திரி கொட்டை இறக்குமதி செய்ததில், கேரளா வியாபாரி ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் 6 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, மேற்கு ஆப்ரிக்கா கினியா பிசாவு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் அர்மண்டோ சில்வா தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார்.


அந்த புகார் மனுவில், கேரளாவை சேர்ந்த பெஜில் சுகுமார் என்பவர் முந்திரி கொட்டை இறக்குமதி தொடர்பாக கடந்த ஆண்டு என்னை தொடர்பு கொண்டார். இதையெடுத்து, 32 கன்டெய்னர்களில் தூத்துக்குடி துறைமுகம் வழியாக முந்திரி கொட்டை இறக்குமதி செய்வதற்கு பெஜில் சுகுமார் ஒப்பந்தம் செய்தார். வங்கி மூலம் பணத்தை கட்டியதும், அதற்கான ஆவணம் முறையாக வந்த பிறகு துறைமுகத்தில் இருந்து கண்டெய்னர் பெட்டிகளை வெளியே கொண்டு செல்ல வேண்டும் என இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டோம்.




ஆனால், இரண்டு கன்டெய்னர்களுக்கு மட்டும் முறையாக பணத்தை பெஜில் சுகுமார் அனுப்பினார். அதற்கான முறையான ஆவணங்களை காண்பித்து துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர் பெட்டிகளை எடுத்துச் சென்றார். பின்னர், 11 கன்டெய்னர்களுக்கு 90 நாட்களுக்குள் பணத்தை கட்டி விடுகிறேன் என உறுதியளித்த பெஜில் சுகுமார், அதற்கான ஆவணங்களை காண்பித்து எடுத்துச் சென்று விற்பனை செய்து விட்டார். ஆனால், அதற்குரிய பணத்தை இன்னும் தராமல் ஏமாற்றி வருகிறார்.




இதுதவிர, தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்த 19 கன்டெய்னர்களை மோசடியாக போலி ஆவணங்கள் தயாரித்துள்ளார். எனது நிறுவனத்திற்கு பணத்தை செலுத்திவிட்டதாக ஆவணங்களை தயாரித்து, சுங்க இலாகா அதிகாரிகளிடம் காண்பித்துள்ளார். பின்னர், 19 கன்டெய்னர்களையும் உடைத்து அதில் இருந்த முந்திரி கொட்டைகளை லாரிகள் மூலம் ஏற்றிச் சென்றுள்ளார்.


இதற்கு உரிய சுமார் 5.40 கோடி ரூபாய் வரை தராமல் பெஜில் சுகுமார் ஏமாற்றி உள்ளார். இதுதொடர்பாக, அவரை தொடர்பு கொண்டால், உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டுகிறார். இந்த மோசடி தொடர்பாக 45 நாட்களாக தூத்துக்குடியில் தவித்து வருகிறேன். மாவட்ட எஸ்.பி., உடனடியாக வழக்கு பதிவு செய்து பெஜில் சுகுமாரை கைது செய்து எனக்கு சேர வேண்டிய பணத்தைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்து உள்ளார்.