திருவண்ணாமலை தாமரை நகர் பத்தாவது தெருவை சேர்ந்தவர் பெருமாள் இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆவார். இவருடைய  மனைவி ஆதிலட்சுமி இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். இரண்டாவது மகன் சிவசங்கர் சென்னையில் உள்ள தனியார்  பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ஆம் தேதி வீட்டில் ஆதிலட்சுமி தனியாக இருந்தபோது, உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஆதிலட்சுமியை  சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் ஆதிலட்சுமி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை நகர காவல் துறையினர், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் இறந்த ஆதிலட்சுமியின் மகன் சிவசங்கரும் சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சத்யா என்பவருக்கும் திருமணம் நடந்தது சத்யா தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரிந்து வந்தார்.




மருமகள் கூலிப்படை வைத்து மாமியார் கொலை 


திருமணத்துக்கு பின்னர் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று சத்தியா கூறியதால் அவருக்கும் ஆதிலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது குறித்து சத்யா சென்னை கொரட்டூரில் வசிக்கும் தன் அண்ணன் பிரபு என்பவரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் திருவண்ணாமலை சமுத்திர காலனியைச் சேர்ந்த ஹானஸ்ட் ராஜ் சரண் என்கின்ற சரண்குமார் ராமலிங்கனார் தெருவை சேர்ந்த பத்ரி நாராயணன் திராவழி தெருவை சேர்ந்த முகமது அலி ஆகியோர் கொண்ட கூலிப்படையை வைத்து ஆதிலட்சுமி தாக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது இதனை அடுத்து மாமியாரை கூலிப்படை வைத்து கொலை செய்த வழக்கில் சத்யா மற்றும் அவரது அண்ணன் பிரபு கூலிப்படையைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் ஆறு நபர்களை நகர காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.




ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு 


இந்த வழக்கு திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற அவலாகத்தில் உள்ள மகிளா  நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக வீணா தேவி ஆஜராகினார். வழக்கை விசாரிக்க மகிளா நீதிமன்ற நீதிபதி சுஜாதா தீர்ப்பளித்தார். அதில் திட்டம் தீட்டி கூலிப்படையை வைத்து ஆதிலட்சுமி கொலை செய்த பிரபு மற்றும் ஆனஸ்ட்ராஜ் சரண் பத்ரி நாராயணன், முகமது அலி ஆகிய ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் .தலா 3000 அபராதமும் மருமகள் சத்யாவுக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் 2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனை விதிக்கப்பட்ட ஆறு பேரையும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது