இந்தியாவுக்கு எதிராக பிரிவினைவாத பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967இன் படி பயங்கரவாத அமைப்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தை ஜிகாத் வன்முறையின் வழியாக கவிழ்த்துவிட்டு, இஸ்லாமிய ஆட்சியை நிறுவவும் பாகிஸ்தானிடம் இருந்து ராணுவ உதவியை பெற்று காஷ்மீரை விடுவிக்கும் சதி திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பு ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பின் சதி திட்டம்:
தங்கள் விஷம பிரச்சாரத்தை மேற்கொள்ள பல்வேறு சமூக ஊடக கணக்குகளை, இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். தேர்தலில் வாக்களிப்பதற்கு எதிராக பிரச்சாரம் செய்திருக்கின்றனர். ஹிஸ்புத்-தஹ்ரீர் அமைப்பின் சித்தாந்தத்தின்படி, தேர்தல் என்பது 'இஸ்லாமுக்கு எதிரானது/ஹராம்' என்றும் பரப்புரை செய்யப்பட்டுள்ளது.
ரகசிய தகவல் தொடர்பு தளங்கள் வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல குழுக்களுடன் இணைந்து பிரிவினைவாத பிரச்சாரங்களை நடத்தியிருந்ததாக என்ஐஏ அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த ஜூலை மாதம், சென்னை நகர காவல்துறையிடம் இருந்து என்ஐஏவுக்கு இது தொடர்பான வழக்கின் விசாரணை மாற்றப்பட்டது.
இந்த நிலையில், ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து தடை செய்துள்ளது.
மத்திய அரசு அதிரடி:
கடந்த மாதம், இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, தாம்பரம் மற்றும் கன்னியாகுமரியில் சந்தேகத்திற்குரிய 11 பேரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்புக்கு சொந்தமான டிஜிட்டல் சாதனங்கள், கணக்கில் வராத பணம் மற்றும் புத்தகங்களை கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க: Shantanu Naidu-Ratan Tata: ரத்தன் டாடா தெரியும்.. அன்புத் தோழன், இளம் அதிகாரி சாந்தனு நாயுடு தெரியுமா?