மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த ஆரம்ப காலத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை  கண்டது. ஆனால், தற்போது அதை மீண்டும் நடைமுறைப்படுத்துவதில் பல தடைகள் நிலவுகின்றன.


பல அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அரசியலமைப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். இதை அமல்படுத்த மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டி வந்தாலும், பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


காங்கிரஸ், திமுக தொடங்கி மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரை பல கட்சிகள், ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


கேரள அரசு கொண்டு வந்த தீர்மானம்:


இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று கேரள சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது, ஜனநாயகத்திற்கு எதிரான நடைமுறை என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கேரள சட்டப்பேரவையில் இந்த தீர்மானத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் சார்பில் மாநில சட்டமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ராஜேஷ் தாக்கல் செய்தார். பின்னர் பேசிய அவர், "ஒரு நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை மத்திய அரசு அங்கீகரிப்பது, நாட்டின் கூட்டாட்சி முறையை பலவீனப்படுத்தும்.


நாட்டின் சமூக, கலாச்சார மற்றும் அரசியல் வேறுபாடுகளை சேதப்படுத்தும் ஒருங்கிணைந்த முயற்சியாக நாங்கள் இதை பார்க்கிறோம்" என்றார். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிய முதல் மாநிலம் கேரளாதான்.


ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் என்ன?


ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மாநிலங்களுக்கும் மக்களவைக்கும் முன்பு போல் வெவ்வேறு நேரங்களில் தேர்தல் நடத்துவதற்குப் பதிலாக,  நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது ஆகும். இதனால் தேர்தல் செலவு குறைவதோடு, தேர்தல்களால் மக்கள் நலத்திட்டங்கள் தாமதமாவதும் நீங்கும் என கூறப்படுகிறது.


கடந்த காலத்தில் 1951 முதல் 1967 வரை நாட்டில் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை தான். அதன் பிறகு நடந்த அரசியல் நிகழ்வுகளால் மாநிலங்களில் ஆட்சிகள் கவிழ்ந்தன. இடைத்தேர்தல்கள் வந்தன.


பல்வேறு மாநில சட்டசபைகளின் தொகுதிகள் மறுவரையற செய்யப்பட்டன. மக்களவைக்கும், மாநில சட்டசபை தேர்தலுக்கும் சம்பந்தமே இல்லாமல் போனது. ஆனால், 2014-ம் ஆண்டு முதல் தேர்தல் அறிக்கையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முழக்கத்துடன் மக்கள் முன் வந்த, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இந்த முறை அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.


அதற்காக 2019ல் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து இப்போது அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.