மாபெரும் தொழிலதிபரும் ஆகச்சிறந்த மனிதருமான ரத்தன் டாட்டா நேற்று நள்ளிரவு காலமானார். 86 வயதான இவர், வயது மூப்பு காரணமாக மும்பை மருத்துவமனையில் உயிரிழந்தார். பல்லாயிரம் கோடி ரூபாய் சாம்ராஜ்யத்துக்கு அதிபதியான மூத்த தொழிலதிபர் ரத்தன் டாடா, ஓர் இளைஞனின் தோழனாகி, அவரை டாடா நிறுவனத்தின் துணை மேலாளர் ஆக்கிய கதை தெரியுமா?


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரத்தன் டாடாவின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியானபோதுதான், சாந்தனு நாயுடுவைப் பற்றியே வெளியுலகுக்குத் தெரிய வந்தது.


புனேவைச் சேர்ந்த சாந்தனு நாயுடு


தெலுங்கு குடும்பத்தைச் சேர்ந்தாலும் புனேவில் பிறந்து, வளர்ந்தவர் சாந்தனு நாயுடு. சாவித்ரி பாய் புலே பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த சாந்தனு நாயுடு, டாட்டா எல்க்ஸியில் ஆட்டோமொபைல் வடிவமைப்புப் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார். அப்போது அவர் கண் முன்னால் வேகமாகச் சென்ற வாகனத்தில் அடிபட்டு நாய் ஒன்று இறந்தது. இதைப் பார்த்து வருந்திய சாந்தனு, அத்துடன் நின்றுவிடவில்லை.




எதிரொலிக்கும் பட்டைகளை தெரு நாய்களின் கழுத்தில் கட்டினால், விபத்தையும் அதனால் ஏற்படும் உயிரிழப்பையும் தவிர்க்கலாம் என்று கண்டுபிடித்தார். நண்பர்களின் உதவியோடு செய்தும் காட்டினார்.


ஆச்சரியப்படுத்தும் நட்பு


இதைப் பெரிய அளவில் செய்ய முடிவெடுத்து, தன் முதலாளிக்குக் கடிதம் எழுதி ஆதரவு கோரினார். ஆச்சர்யப்படுத்தும் விதமாக ரத்தன் டாடா, சாந்தனுவை நேரிலேயே அழைத்துச் சந்தித்தார். 2014-ல் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. நட்பு முளைத்தது. தெரு நாய்கள் மீதான அக்கறை, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் நேர்மறை செயல்கள் ஆகியவற்றால் இருவரும் இன்னும் நெருக்கமாகினர்.


பிறகு, சாந்தனு கார்னெல் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்கச் சென்றார். எனினும் இந்தியா திரும்பி, டாடா அறக்கட்டளைக்காகப் பணியாற்றுவேன் என்று உறுதியளித்துவிட்டுச் சென்றார்.


தொடர்ந்து 2018-ல் இந்தியா திரும்பிய அவருக்கு ரத்தன் டாடாவிடம் இருந்து அழைப்பு வந்தது. ’’நீங்கள் என் உதவியாளராகப் பணிபுரிய விரும்புகிறீர்களா?' என்று கேட்டார் டாடா. ஆர்வத்துடன் சம்மதித்துப் பணிபுரியத் தொடங்கிய சாந்தனு, டாடாவின் துணை மேலாளர் ஆனார். டாடாவுடன் பயணிக்கும் தோழனாகவும் மாறினார். 




சென்று வாருங்கள், என் அன்பு கலங்கரை விளக்கமே


ரத்தன் டாடாவின் இறப்பை அடுத்து சாந்தனு நாயுடு, ‘’இந்த நட்பு எனக்குள் விட்டுச்சென்ற இழப்பை வாழ்நாள் முழுவதும் நிரப்ப முயற்சிப்பேன். துக்கம் என்பதுதான் அன்புக்கு கொடுக்க வேண்டிய விலைபோல! சென்று வாருங்கள், என் அன்பு கலங்கரை விளக்கமே..." என்று தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.