வட இந்தியாவில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த மழை தற்போது தென்னிந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. டெல்லி, ஹிமாச்சல், உத்தரபிரதேசம் என பல மாநிலங்களில் கனமழை பெய்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
ஹைதரபாத்தில் கனமழை:
இந்த நிலையில், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில், கிழக்கு கடற்கரையோரத்தில் அமைந்துள்ள மாநிலங்களில் அதிக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தெலங்கானாவில் கடந்த 3 நாட்களாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை அபாயமும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹைதரபாத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நபர் மாநகராட்சி அலுவலகத்தில் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் பகுதியில் அமைந்துள்ளது அல்வால் இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதுடன், தெருக்கள் எல்லாம் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கிறது.
பாம்பை விட்ட நபர்:
இந்த பகுதியில் வசித்து வருபவர் சம்பத்குமார். மழையால் தெருக்களில் தேங்கி நிற்கும் கனமழை காரணமாக, சம்பத்குமார் வீட்டின் உள்ளே பாம்பு புகுந்துள்ளது. இதுதொடர்பாக, அவர் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியையும் அகற்றுவதற்கும், அந்த இடத்தை தூய்மைப்படுத்தவும் மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, இதுதொடர்பாக புகார் அளிக்க சம்பத்குமார் ஹைதரபாத் மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்றுள்ளார். ஆனால், அங்கும் அவரது புகாருக்கு யாரும் தக்க பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அவரை 6 மணி நேரம் காத்திருக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சம்பத்குமார் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் தான் ஏற்கனவே தயாராக வைத்திருந்த பாம்பை அதிகாரியின் மேஜை மீது விட்டார்.
மேஜை மீது பாம்பை கண்ட அதிகாரிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தன்னுடைய புகாருக்கு தக்க நடவடிக்கை எடுக்கவே சம்பத்குமார் இந்த நூதன போராட்டத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், தீயணைப்பு துறை வீரர்கள் வந்து பாம்பை பிடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளும், காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: Parliament Session: வலுக்கும் எதிர்ப்பு.. நாடாளுமன்ற அலுவல்களில் இன்று கருப்பு உடையில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் முடிவு
மேலும் படிக்க: Byjus Layoffs: என்னதான் நடக்குது? பெங்களூரு அலுவலகத்தை மூடிய பைஜூஸ்.. எத்தனை பேருக்கு வேலை போச்சு?