இந்திய இளைஞர்களின் கனவு நாயகனாக இன்று வரை திகழும் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாமின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
பொருளாதார ரீதியாக பின் தங்கிய இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் தீவு நகரமான இராமேஸ்வரத்தில் பிறந்தார். அங்குள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கிய அவர், பள்ளிக்காலத்திலேயே குடும்பத்தின் நிலை கருதி, பேப்பர் போடுவது என பணிகளை மேற்கொண்டு வந்தார்.
திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் படிப்பை முடித்த அப்துல் கலாம், 1955 ஆம் ஆண்டு சென்னை எம்.ஐ.டி விண்வெளி பொறியியல் படிப்பு படித்தார். பின்னர் அதில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இதனை தொடர்ந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO)பணியாற்றினார். இந்திய விண்வெளித் துறையின் மைல் கல்லாக உள்ள அக்னி-1 திட்டத்திற்கு வித்திட்டார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் கலாமின் மிகப்பெரிய சாதனையாக கருதப்படும் ரோகினி செயற்கைக்கோள் ஏவப்பட்டதில் கலாமின் பங்கு முக்கியமானது. இதற்காக அவருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. 1999 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்கு வகித்தார். அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ள அப்துல்கலாம் 2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக பதிவியேற்றார்.
குடியரசு தலைவராவதற்கு முன் அப்துல்கலாமுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. மக்களின் ஜனாதிபதி என அன்பாக அழைக்கப்பட்ட அப்துல் கலாம் 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். இப்படியான நிலையில் அப்துல் கலாம் இளைஞர்களின் கனவு நாயகனாக திகழ்ந்தார். ”கனவு காணுங்கள் உங்கள் கனவு மட்டும் தான் உங்கள் லட்சியங்களை அடைவதற்கானப் பாதையை வகுக்கும் என இளம் தலைமுறையினரை தட்டி எழுப்பியவர் அப்துல்கலாம். கனவு என்பது உறங்கும் போது காண்பதல்ல.. மாறாக உன்னை உறங்கவிடாமல் செய்வதே அந்த கனவு” என உத்வேகம் ஊட்டினார்.
அக்னி சிறகுகள், இந்தியா 2020 உள்ளிட்ட அவரின் புத்தகங்கள் இன்றும் இளம் தலைமுறையினரால் வாசிக்கப்படுகிறது. அப்துல்கலாம் தமிழ்நாட்டின் பெருமையாக கருதப்படுகிறார். அவர் 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரின் மரணம் உலகமெங்கும் உள்ள இந்திய மக்களை அதிர்ச்சி மற்றும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது உடல் சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகில் உள்ள பேய்க்கரும்பு எனும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டது. இன்றும் ராமேஸ்வரம் செல்லும் மக்கள் மறக்காமல் அப்துல்கலாமின் நினைவிடம் சென்று வருகிறார்கள்.
காலம் உள்ள வரை நம் அனைவரின் மனதிலும் அப்துல்கலாம் இருப்பார் என்பதே உண்மை..!