நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சி தரப்பில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 5 நாட்களாக எதிர்க்கட்சிகள் அவையில் முழக்கம் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் தரப்பில் நாடாளுமன்றத்தில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இதனால் நேற்றைய தினம் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கான நோட்டீஸ் வழங்கப்பட்டது.


மணிப்பூர் விவகாரத்தில் விவாதத்தை அனுமதிக்காதது, நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதத்தை தொடங்காதது ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வியாழக்கிழமை) கருப்பு உடை அணிந்து கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் பங்கேற்றனர். 


மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முறறுகையிட்டு எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை மதியம் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாநிலங்களவையில், பிரதமர் மோடி மணிப்பூர் விளக்கமளிக்க வேண்டுமென வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி தரப்பில் இந்தியா, இந்தியா என கோஷங்களை முழக்கமிட்டனர். தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பில் மோடி, மோடி என முழக்கமிட்டனர். இதனால் மாநிலங்களவையும் பிற்பகல் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும், எதிர்க்கட்சியினர் அனைவரும் கருப்பு உடை அணிந்து, நாடாளுமன்ற  வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

நேற்றைய முன் தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற அலுவல்கள் முறைப்படி நடக்க எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு தர வேண்டும் என குறிப்பிட்டு மல்லிகார்ஜுன் கார்கேவிற்கு கடிதம் எழுதியிருந்தார்.


அதற்கு பதிலளிக்கும் வகையில் நேற்றைய தினம் மல்லிகார்ஜுன் கார்கே அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், "ஒரு நாளில் எதிர்க்கட்சிகளை ஆங்கிலேய ஆட்சியாளர்களுடனும், தீவிரவாத குழுக்களுடனும் பிரதமர் ஒப்பிட்டு பேசுகிறார். அதே நாளில், மத்திய உள்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளிடமிருந்து சாதகமான நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாக உருக்கமாக கடிதம் எழுதுகிறார். நீண்ட காலமாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் இடைவெளி இருப்பது தெரியும். இப்போது ஆளுங்கட்சிக்குள்ளேயே இடைவெளி ஏற்பட்டிருப்பது வெளிப்படத் தொடங்கியிருக்கிறது.


எதிர்க்கட்சிகளை திக்கற்றவர்கள் என்று பிரதமர் கூறியிருப்பது அபத்தமானது மட்டும் இல்லை, துரதிர்ஷ்டவசமானதும் கூட. பிரதமர் அவைக்கு வந்து மணிப்பூர் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என நாங்கள் கேட்கிறோம். அப்படிச் செய்வது அவரின் மரியாதையை புண்படுத்தும் என்று பிரதமர் கருதுகிறார். நாட்டு மக்களிடம் எங்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வு உள்ளது. அதற்காக என்ன விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.


மேலும், “ பாராளுமன்றத்தில் அரசின் அனுகுமுறைக்கு எதிராக தன்னிச்சையான உணர்வுடன் கடுதம் எழுதி இருக்கிறார் அமித்ஷா. எதிர்க்கட்சிகளின் இது போன்ற அணுகுமுறையை பல கூட்டத்தொடரில் சந்தித்துள்ளோம். எதிர்க்கட்சிகள் தரப்பில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என தினந்தோறும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. ஆனால் பிரதமர் அதனை நிராகரித்து வருகிறார். அப்படி விளக்கம் அளிப்பது கவுரத்திற்கு இழுக்காக கருதுகிறார். உணர்ச்சிகளை கடிதத்தில் கொண்டு வருவது எளிது. அவை அலுவல்கள் சீராக நடைபெற வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துக்களை எழுப்ப வாய்ப்பளிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.