கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்கும் நிகழ்வில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றிபெற்றது. யார் முதலமைச்சர் என்ற இழுபறியும் முடிவுக்கு வந்த நிலையில், சித்தராமையா நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நாளை 12.30 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், டி.கே.சிவக்குமார் துணை முதலமைச்சராகவும், அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். இவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைக்கிறார்.


இந்நிகழ்ச்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கலந்துகொள்க்ன்றனர். இவர்கள் மட்டுமல்லாமல், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், இமாச்சல முதலமைச்சர் சுக்விந்தர் சிங், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலாமைச்சர் தேஜஸ்வி யாதவ், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரண் ஆகியோர் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.


மேலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், சீத்தாராம் யெச்சூரி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த பதவியேற்பை மாற்ற திட்டமிட்டு, தங்கள் கொள்கைக்கு ஏற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது காங்கிரஸ் தலைமை. இந்நிகழ்ச்சியில் அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் அனைவரும் கலந்துகொண்டால், 2024 தேர்தலுக்கான கூட்டணி ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகவே கருதலாம் என்று அரசியல்விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், பதவியேற்பு விழாவில் மம்தா பானர்ஜி கலந்துகொள்ளமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக, திரிணாமுல் காங்கிரஸ் மக்களவைக் குழு துணை தலைவர் ககோலிகோஷ் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


காங்கிரஸ் கூட்டணி பக்கம் சாயும் விதமாக சமீபத்தில் பேசியிருந்தார் மம்தா பானர்ஜி. இதனையடுத்தே அவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், கடைசி தருணத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை. அதோடு, மொத்தமாக புறக்கணிக்காமல் தனது சார்பில் ஒருவரை அனுப்புவதையும் கருத்தில் கொள்ள வேண்டும். பாஜக, காங்கிரஸுக்கு எதிராக மூன்றாவது அணி அமைக்க வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த பதவியேற்பு விழாவில் அழைப்பு விடுக்கப்பட்ட கட்சிகள் கலந்து கொண்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேசினால், இதயம் இனித்தது கண்கள் பனித்தது என்று ஒன்றாக இணைந்து மூன்றாவது அணிக்கான வாய்ப்பு அமையாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று, தான் செல்லவில்லையென்றாலும் சேஃப்டிக்காக தன் சார்பில் ஒருவரை அனுப்பியுள்ளார் மம்தா என்று கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.