நாடு முழுவதும் ரூபாய் 2 ஆயிரம் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் குறைந்த அளவே அச்சடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு எடுத்த நடவடிக்கையிலே மக்களால் எப்போதும் மறக்க முடியாத நடவடிக்கை 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பே. இதனால், நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் அவதிப்பட்டனர். அப்போதுதான், 2 ஆயிரம் தாள்கள் அமல்படுத்தப்பட்டது.






இந்த நிலையில், கடந்த ஆண்டு முதலே ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் போதியளவில் புழக்கத்தில் இல்லாமல் காணப்பட்டது. மேலும். இதுதொடர்பாக விளக்கம் அளித்த மத்திய அரசு ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் அச்சடிப்பதை 2019ம் ஆண்டே நிறுத்திவிட்டதாக கூறினர். இந்த சூழலில்தான் ரிசர்வ் வங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில்,” ஆர்.பி.ஐ. சட்டவிதிப்படி 24 (1)ன் படி, 2016ம் ஆண்டு ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.  மேலும், ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்பட்டது. இந்த ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் 2018 – 2019ம் ஆண்டு அச்சடிப்பது நிறுத்தப்பட்டது.




இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கையின்படி, ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 2 ஆயிரம் மதிப்பிலான நோட்டுகள் தற்போது செல்லுபடியாகும். மே 23-ந் தேதி முதல் எந்த வங்கியிலும் ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை மற்ற வகைகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம்.


பொதுமக்கள் தங்கள் வங்கிக்கணக்குகளில் ரூபாய் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் அல்லது எந்த வங்கிக்கிளையிலும் வேறு வகைகளில் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம். வங்கிக்கணக்குகளில் டெபாசிட் செய்வது வழக்கமான முறையில், கட்டுப்பாடுகள் இல்லாமல் தற்போதுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் சட்டவிதிகளுக்கு உட்பட்டு செய்யலாம்.


பொதுமக்களுக்கு போதுமான நேரத்தை வழங்க, அனைத்து வங்கிகளும் செப்டம்பர் 30, 2023 வரை ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை டெபாசிட் அல்லது மாற்றும் வசதியை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு இதுதொடர்பான தனி வழிகாட்டுதல்களும் அனுப்பப்பட்டுள்ளது.”


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.