சமீபத்தில், இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கான தேசிய கட்சி அந்தஸ்தை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. 


ஒரு கட்சியை தேசிய கட்சியாக அங்கீகரிப்பதற்கு சில அளவீடுகள் உள்ளன. அதன் படி, ஒரு கட்சி நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தால் அதற்கு தேசிய கட்சி அந்தஸ்து வழங்கப்படும். அல்லது அண்மையில் நடந்த தேர்தல்களில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் குறைந்தது 6 சதவீத வாக்குகளை அக்கட்சியின் வேட்பாளர்கள் பெற்றிருக்க வேண்டும்.


அல்லது அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் நான்கு எம்.பி.க்களை பெற்றிருக்க வேண்டும். அல்லது மக்களவை தொகுதிகளில் மூன்று மாநிலங்களுக்கு குறையாமல் மொத்த இடங்களில் குறைந்தபட்சம் 2 சதவீத இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று நிபந்தனைகள் உள்ளன.


இவற்றை பூர்த்தி செய்த காரணத்தால் இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கான தேசிய கட்சி அந்தஸ்து பறிக்கப்பட்டது.


தேசிய கட்சி அந்தஸ்தை திரும்ப பெறுவதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தொலைப்பேசியில் பேசியதாக மேற்குவங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, அரசியலில் புயலை கிளப்பினார்.


இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் மம்தா பானர்ஜி. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அழைத்தது நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன் என அவர் சவால் விடுத்துள்ளார்.


இதுகுறித்து விரிவாக பேசிய மம்தா, "ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தேன். திரிணாமுல் கட்சியின் தேசிய கட்சி அந்தஸ்து தொடர்பாக அமித் ஷாவை அழைத்தது நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன்.


அதிகாரி பொய் சொல்கிறார். சில நேரங்களில் மௌனம் பொன்னானது. எதிர்க்கட்சிகள் ஒன்றாக இல்லை என்று நினைக்க வேண்டாம். நாம் ஒன்றாக இருக்கிறோம். எல்லோரும் ஒருவருக்கொருவர் உறவுகளைப் பேணுகிறோம். சரியான நேரத்தில் சூறாவளி போல் நடக்கும்" என்றார்.


தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு குறித்து பேசிய மம்தா, "வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் நான் எதுவும் சொல்ல மாட்டேன். மற்றவர்களை நேசிப்பவர்களை நான் நேசிக்கிறேன். இந்த விஷயம் உணர்வுபூர்வமானது.


மக்களின் நாடித் துடிப்பைப் பார்க்க வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவைப் பார்க்க வேண்டும், அதன் பிறகு நாம் ஒரு கருத்தை உருவாக்கலாம்" என்றார்.


மேலும் படிக்க: தன்பாலின திருமண வழக்கில் உச்சநீதிமன்றம் புதிய அதிரடி..! சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அனுமதியா?