ஒரு முன்னாள் முதலமைச்சரான என்னை அண்ணாமலையின் பின்னால் அமரவைத்து அவமானப்படுத்திவிட்டார்கள் என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷட்டர் வருத்தம் தெரிவித்துள்ளார்.


கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டன. ஆனால், பாஜகவில் போட்டியிட வாய்ப்பை எதிர்பார்த்து, அது கிடைக்காத விரக்தியில் பாஜகவில் இருந்து பல்வேறு மூத்த நிர்வாகிகள்  சிட்டிங் எம்எல்ஏ மற்றும் எம்எல்சிக்கல் காங்கிரஸில் இணைந்து வருகின்றனர். கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சர் லக்‌ஷ்மண் சாவடி பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்த இரண்டு நாளில் பாஜக மூத்த நிர்வாகியும், 7 முறை எம்எல்ஏவாக இருந்தவரும், கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்தவருமான ஜெகதீஷ் ஷட்டர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். அவர் தற்போது உள்ள உப்பள்ளி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததையடுத்து அதிருப்தியில் பாஜகவில் இருந்து விலகினார். காங்கிரஸில் இணைந்தவுடனேயே அவருக்கு உப்பள்ளி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.


காங்கிரஸில் இணைந்த பிறகு ஜெகதீஷ் ஷெட்டர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எனது குடும்பம் முழுவதும் அரசியலில் ஈடுபட்டுள்ளது. உப்பள்ளி தொகுதியில் பாஜகவின் வளர்ச்சிக்காக எனது குடும்பம் பாடுபட்டுள்ளது. எனக்கு அதிகார பசி எல்லாம் இல்லை. ஆனால், கர்நாடக பாஜகவை சிலர் கட்டுப்படுத்துகிறார்கள். எனக்கு ஏன் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்று கேட்டேன். ஆனால் ஒருவர் கூட பதிலளிக்கவில்லை. இது தான் பிரச்சனைக்கு காரணமானது. அதோடு, அவர்களது நோக்கம் சீனியர்களை கட்சியை விட்டு நீக்குவதாகதான் இருந்தது” என்று குற்றம்சாட்டினார்.


மேலும், “எனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காததற்கு முக்கிய காரணம் பாஜக தேசிய பொதுச்செயலாளர் PL சந்தோஷ்தான். பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோருக்கு கர்நாடக பாஜகவில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. கர்நாடக பாஜக சில நபர்களால் சீரழிக்கப்பட்டு வருகிறது. பிரகலாத் ஜோஷியை தர்வார் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட அவரை நான் தான் நாமினேட் செய்தேன். அவரது வெற்றிக்காக வேலை செய்திருக்கிறேன். ஆனால், அவர் என்னை சரியாக நடத்தவில்லை. என்னை ஒரு குழந்தை போல நடத்தினர். நான் 7 முறை பாஜகவின் எம்எல்ஏவாக இருந்திருக்கிறேன். கட்சியை வளர்த்திருக்கிறேன். முதலமைச்சராகவும் இருந்திருக்கிறேன். ஆனால் ஏன் எப்படி நடந்தது?” என்று கூறினார்.


தனது பேட்டியில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். “அண்ணாமலை இங்கு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தார். விருப்ப ஓய்வு பெற்றுச் சென்ற அவர் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் நடைபெற்றத் தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்தது. 4 மற்றும் 6 தொகுதிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வெற்றிபெற்றது. ஆனால், அவர் கர்நாடக தேர்தலில் போட்டியிட இடம் ஒதுக்கீடு வழங்கும் நிர்வாகியாகவும் நியமனம் செய்யப்பட்டார். அதனால் முன்னாள் முதலமைச்சரான நான், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி முன் தலைவணங்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டேன். அவருக்குப் பின்னால் நான் அமரவைக்கப்பட்டேன். இவைகள் எல்லாம் ஏன் நடந்தது?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.