வரும் மே மாதம் 10-ஆம் தேதி, கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் முடிவுகள், மே 13ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.
ஆட்சியை பிடிக்குமா காங்கிரஸ்?
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அரசியல் பரபரப்பு தொற்றி கொண்டது. கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெறும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, யார் முதலமைச்சராக வர வேண்டும் என கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா வர வேண்டும் என பெரும்பாலான மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில், முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் சித்தராமையாவுக்கு அக்கட்சியின் மாநில கமிட்டி தலைவர் டி.கே. சிவகுமார் பெரும் சவால் விடுத்து வருகிறார்.
மனம் திறந்த சித்தராமையா:
இந்நிலையில், இதுவே தன்னுடைய கடைசி தேர்தல் என சித்தராமையா மனம் திறந்து பேசியுள்ளார். வருணா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து பேரணியில் கலந்து கொண்ட அவர், "இந்த சட்டசபை தேர்தலுக்கு பின், தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன். வருணா மக்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறார்கள்.
அவர்களின் ஆதரவின் காரணமாக, எனது அரசியல் வாழ்க்கையில் முக்கிய இடங்களை அடைந்துள்ளேன். வருணா தொகுதியில் நான் வேட்புமனு தாக்கல் செய்வது இதுவே கடைசி முறையாகும்" என்றார்.
75 வயதான சித்தராமையா, 1983ஆம் ஆண்டு, சாமுண்டேஸ்வரி தொகுதியில் முதல் முறையாக வெற்றி பெற்றார். பின்னர், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவிகளை வகித்தார். 2013 முதல் 2018 வரை கர்நாடக முதலமைச்சராக பொறுப்பு வகித்தார்.
கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில், பாதாமி, சாமுண்டேஸ்வரி ஆகிய இரண்டு தொகுதிகளில் சித்தராமையா போட்டியிட்டார். அதில், அவர் பாதாமியில் மட்டுமே வெற்றி பெற்றார். இந்த தேர்தலில், தனது பாரம்பரியமான வருணா தொகுதியில் களம் காண்கிறார் சித்தராமையா. முன்னதாக, கோலார் தொகுதியிலும் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்தார்.
ஆனால், இந்த முறை அங்கு போட்டியிட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுவிட்டது. சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மீண்டும் முதலமைச்சர் பதவி தனக்கே அளிக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் மேலிடத்திடம் சித்தராமையா வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.