நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நிலுவையில் உள்ளன. ஆனால், தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மறுத்து வருகிறது.
தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க மறுப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்திருந்தது. இதையடுத்து, கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின்போது, தன்பாலின திருமணத்திற்கு மத்திய அரசு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
"ஒருவரின் பிறப்புறுப்புதான் முடிவு செய்யும்"
"ஒருவர் ஆணா, பெண்ணா என்பதை ஒருவரின் பிறப்புறுப்புதான் முடிவு செய்யும்" என மத்திய அரசு வாதம் முன்வைத்திருந்தது. நேற்று நடைபெற்ற விசாரணையில், இதற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்த உச்ச நீதிமன்றம், "இப்படி இருந்தால்தான் ஆண் என்ற கருத்தாக்கம் எதுவும் இல்லை. அதேபோல, இப்படி இருந்தால்தான் பெண் என்ற கருத்தாக்கம் எதுவும் இல்லை. ஒருவரின் பாலினம் என்பது பிறப்புறுப்பை காட்டிலும் சிக்கலான விஷயம்" என தெரிவித்தது.
"ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான வேற்று பாலினத்தவர் திருமணத்தையே சிறப்பு திருமண சட்டம் உள்ளிட்ட சட்ட பிரிவுகள் அங்கீகரிக்கிறது" என மத்திய அரசு வாதம் முன்வைத்தது. இந்த வாதத்திற்கு பதில் அளித்த மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹித்கி, "மதங்களின் தனி சட்டங்களில் இந்த மனுக்கள் தலையிடவில்லை. ஆனால், சிறப்பு திருமண சட்டத்தை விரிவாக விளக்கி தன்பாலின திருமணத்தை உள்ளடக்க முயற்சிக்கிறோம்" என்றார்.
சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அனுமதியா?
இந்த வாதத்தை கேட்ட உச்ச நீதிமன்றம், "சமூகத்தில் இதனால் அதிகரிக்கும் மாற்றங்கள் குறித்து ஆராய்வதே சிறந்த வழயாக இருக்க முடியும். தனி சட்டங்களுக்கு உள்ளே செல்ல மாட்டோம். சிறப்பு திருமண சட்டத்திற்கு விரிவான விளக்கம் அளித்து அதனை பாலின நடுநிலைமையுடன் ஆக்க முடியுமா என்பது குறித்து ஆராய போகிறோம்" என தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த அமர்வில், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ். ரவீந்திர பட், ஹிமா கோலி, பி.எஸ். நரசிம்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய தலைமை நீதிபதிக்கு அடுத்தபடியாக உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள சஞ்சய் கிஷன் கவுல், வழக்கின் முக்கியத்துவம் கருதி இந்த அமர்வில் இடம்பெற்றுள்ளார். வழக்கமாக, அரசியல் சாசன அமர்வில் இணை நீதிபதியாக இரண்டாவது மூத்த நீதிபதி நியமிக்கப்பட மாட்டார்.
கடந்த 2018ஆம் ஆண்டு, தன்பாலின ஈர்ப்புக்கு விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் திரும்பப்பெற்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்புக்கு பிறகும், மாற்று பாலினத்தவர் மீது பாகுபாடு காட்டப்படுவதாகவும் இந்திய சமூகம் ஏற்று கொள்ள மறுக்கிறது என்றும் LGBT சமூகத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.