நீட் தேர்வு குறித்த நீதியரசர் ஏ.கே. ராஜன் கமிட்டியின் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் முக்கிய பேசும் பொருளாகி உள்ளது. தமிழகம் மட்டுமின்றி நீட் தேர்வுக்கான எதிர்ப்புக் குரல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எழத் தொடங்கியுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுன் என்று  மகராஷ்டிர மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நானா படோல் அம்மாநில முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.   


இதுகுறித்து செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர்," தமிழ்நாட்டைப் போல் மகாராஷ்டிரா மாநிலமும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோர வேண்டும்" என்று தெரிவித்தார். ஏ.கே.ராஜன் குழு அறிக்கையை சுட்டிக்காட்டிய அவர், " நீட் தேர்வுக்குப் பிறகு எம்.பி.பி.எஸ் படிப்பில் சிபிஎஸ்இ மற்றும் ஆங்கில வழியில் படித்த மாணவர்கள்தான் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். உதரணமாக, 2011-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்த மாநில கல்வி வாரியத்தில் படித்த மாணவர்களின் 71% ஆக இருந்த நிலையில், நீட் தேர்வுக்குப் பின் 48.22% ஆக சரிந்துள்ளது. அதே போன்று, சிபிஎஸ்இ மாணவர்களின் எண்ணிக்கை 0.13% என்ற எண்ணிகையில் இருந்து 26.83 சதவீதமாக அதிகரித்துள்ளது" என்றும் தெரிவித்தார். 






தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. இந்த குழுவின் அறிக்கை நேற்று வெளியானது. இந்த அறிக்கையில், நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை புள்ளி விவரங்களுடன் விவரமாக கூறியுள்ளனர். தமிழ் வழி படிக்கும் மாணவர்களுக்கு நீட் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது,  அரசுப்பள்ளி மாணவர்கள் நீட்டால் பாதிக்கப்படுவது எப்படி உள்ளிட்ட பல தகவல்கள் புள்ளி விவரங்களாக கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நீட் மட்டும் தொடர்ந்தால் தமிழ்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு மிக மோசமடையும். தமிழ்நாட்டின் சூழல் சுதந்திரத்துக்கு முந்தைய சூழலுக்கு தள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளது இந்த அறிக்கை. 


நீட் தேர்வை ரத்து செய்வதற்கான தனி மசோதாவை, சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது. பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. 


முன்னதாக, நீட் தேர்வின் தாக்கங்கள் குறித்து பல்வேறு மாநில அரசுகளின் கவனத்துக்கும் கொண்டு செல்ல இருப்பதாகவும், இறுதியாக நீட் தேர்வை ரத்து செய்யும் நிலையை நிச்சயம் ஏற்படுத்துவோம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.    


மேலும், வாசிக்க:  


NEET Impact: தமிழ்வழி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பை எட்டாக்கனியாக்கியதா நீட்? ஏ.கே.ராஜன் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் 


AK Rajan NEET report: நீட்: 165 பக்க ஏ.கே ராஜன் குழு அறிக்கையின் ‘நறுக்’ பாயிண்ட்ஸ்கள் சில..!