மாநிலங்களவைக்கான தேர்தலில் மத்தியப்பிரதேசத்திலிருந்து போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.  கடந்த ஜூலை மாதம் மத்திய பாரதிய ஜனதா அரசு தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்ததை அடுத்து தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக இருந்த எல்.முருகன் தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம் மற்றும் கால்நாடை பால்வளத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.  ஆனால் தேர்தலில் போட்டியிடாமல் நியமிக்கப்படும் அமைச்சர்கள் ஆறு மாதத்துக்குள் தேர்தலில் நின்று வெற்றிபெற வேண்டும் என்கிற பாராளுமன்ற விதி இருக்கும் நிலையில் தற்போது மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார் அமைச்சர். 






தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கான மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலை அண்மையில் அறிவித்தது தேர்தல் ஆணையம். இதற்கிடையேதான் மத்தியபிரதேச மாநிலங்களவைத் தொகுத்திக்கான பாரதிய ஜனதா வேட்பாளராக எல்.முருகனை அறிவித்தது அந்தக் கட்சி. இதையடுத்து தற்போது மத்தியப்பிரதேசத்திலிருந்து போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார் எல்.முருகன். அவர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மத்திய அமைச்சர் பிரகலாத் பாட்டில் ஆகியோர் அவருடன் இருந்தனர்.  காங்கிரஸ் கட்சி அங்கிருந்து யாரையும் வேட்பாளராக நிறுத்தப்போவதில்லை என அறிவித்ததை அடுத்து முருகன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. முருகன் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் இல.கணேசனுக்கு அடுத்து மத்தியபிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டாவது எம்.பி.யாக முருகன் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாகத் தன்னை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்ததற்கு கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருந்தார் எல்.முருகன். இதுகுறித்த அவரது ட்வீட்டில், ’பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோருக்கு நான் எனது ஆழ்மனதிலிருந்து நன்றிக்கடன் பட்டுள்ளேன். மத்தியப்பிரதேச மக்களுக்குச் சேவையாற்ற இவர்கள் என்னை வாழ்த்தவேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். முருகன் வேட்புமனு தாக்கல் செய்ததற்கு தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலையும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.