தேர்வு என்பது கல்வியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஆனால் கல்வியின் தரத்தை உயர்த்துகிறேன் என்கிற பெயரில் தேர்வைக் கடினமாக்குவதால் இதுவரை பல்கலைக்கழகத்தில் நுழையாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அது முற்றிலுமாக ஒதுக்கி வைக்கிறது - டாக்டர்.பி.ஆர் அம்பேத்கர்


நீட் தேர்வு தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை நேற்று வெளியிட்டது தமிழ்நாடு அரசு. குழுவின் அறிக்கை அம்பேத்கரின் இந்த வாசகத்தை குறிப்பிடுகிறது. 165 பக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த அறிக்கை நீட் ஏன் ரத்து செய்யப்படவேண்டும் என்பதற்கான தரவுப்பூர்வமான மேற்கோள்களைக் கொண்டிருக்கிறது. சாட் (SAT) தொடங்கி, பிமேட், ஆக்ட் (ACT - American college of Testing), ரஷ்யாவின் நுழைவுத் தேர்வு (Unified state exam), தென்னாப்பிரிக்காவின் நுழைவுத் தேர்வு (National Benchmark test) உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் போட்டித் தேர்வுகளைக் குறிப்பிட்டு போட்டித் தேர்வுகளின் வரலாற்றில் இருந்து தொடங்குகிறது அறிக்கை. சர்வதேச நாடுகளின் போட்டித் தேர்வுகள் எப்படி படிப்படியாக அமலுக்குக் கொண்டுவரப்பட்டது என்பதையும் அதுவே இந்தியாவில் CEE or Common Entrance Exam எனப்படும் பொது நுழைவுத் தேர்வு எப்படிக் கொண்டுவரப்பட்டது என்பதையும் ஒப்புமைப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அந்த பொது நுழைவுத் தேர்வுக்கு இருந்த அடிப்படைக் காரணங்கள் கூட இல்லாமல் நீட் தேர்வு எப்படிக் கொண்டுவரப்பட்டது என்பதை பேசியிருக்கிறது அறிக்கை. மேலும் எப்படி சர்வதேச நாடுகள் இதே போட்டித் தேர்வுகளை மறு ஆய்வு செய்து வருகிறார்கள் என்பதையும் அறிக்கை பேசியிருக்கிறது.


நீட் தேர்வினை அரசியல் உந்துதல் காரணமாகக் கொண்டுவரப்பட்டது (Politically Driven) என்கிறது அறிக்கை.
நீட் தேர்வு என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது, சட்டத்துக்குப் புறம்பானது என்பதை மட்டுமே இதுவரை நாம் முன்வைத்து வந்தோம். ஆனால் அதனை கல்விக்குப் புறம்பான செயல்பாடு (Unacademic activity) எனச் சொல்கிறது இந்த அறிக்கை. நீட் கல்வியியல் செயல்பாட்டை முற்றிலுமாக நிராகரித்து, கொடுக்கப்பட்ட பாடத்தை மாணவர்களை எந்த அளவுக்கு உள்வாங்கியிருக்கிறார்கள் என்பதைதான் ஆய்வு செய்கிறதே ஒழிய அதைத் தாண்டி கற்றல் செயல்பாட்டுக்கும் நீட்டுக்கும் தொடர்பே இல்லை. இன்னும் சொல்லப்போனால் நீட் தேர்வு அத்தகைய செயல்பாடே அவசியமற்றது மேலும் அதன் வழியாகப் பெறும் தகுதி உயர்கல்விக்கான தகுதி இல்லை எனவும் நீட்  சொல்கிறது என்பதை அறிக்கை நிறுவியுள்ளது. 
 
சமூகத்தாக்கம் (Social Impact) என்னும்போது பொதுவாக இடஒதுக்கீடு மட்டுமே இதுவரை விவாதிக்கப்பட்டது.ஆனால் நீட் காரணமாக சுகாதாரத்துறை, பொதுசுகாதாரத்துறை எப்படி நலிவுற்றுப் போகும் என்பதையும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு எப்படி மருத்துவரகளே கிடைக்காமல் போவார்கள் என்பதையும் குறிப்பிட்டுள்ளது. அதாவது, தேசிய அளவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மொத்தம் 6.8 சதவிகித காலிப்பணியிடங்கள் உள்ளது எனவும் அதுவே தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் வெறும் 0.94 சதவிகித இடங்கள் மட்டுமே இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது எனவும். பல தசாப்தங்களாக மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு தொடர்பான கொள்கைகள் வகுத்து, ஏழை கிராமப்புற மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., படிக்க சம வாய்ப்பு அளித்து  அவர்கள் பட்டப்படிப்பு முடித்தவுடன் அதே கிராமப்புறத்தில் வேலை செய்யும் அளவுக்கான வலுவான கட்டமைப்பு தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டதே இதற்குக் காரணம் எனவும் அறிக்கை கூறுகிறது

(Report Pg 88:  This has been possible only with the robust system of
policies over decades pertaining to reservations in medical education, giving equal opportunity to
the poor rural area students to study MBBS, who after graduation willingly work in their native
village areas.)


மற்றொருபக்கம் தமிழ்நாட்டின் பொதுச்சுகாதாரத்துறை  (Public health system) நலிவடையும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.நீட் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகான இந்த நான்கு ஆண்டு காலத்தில் முதல்தலைமுறைக் கல்வி பெறுபவர்களில் இருந்து மருத்துவம் படிக்க வருபவர்கள் 9.74 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், கிராமப்புற மாணவர்களில் மருத்துவம் படிக்க வருபவர்கள் எண்ணிக்கை 12.1 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் தமிழ்வழியில் பயின்றவர்கள் மருத்துவம் படிப்பதில் 12.58 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும்  குடும்ப வருமானம் 2.5 லட்சத்துக்கும் குறைவானவர்களில் இருந்து மருத்துவம் படிப்பவர்களில் 10.45 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் கூறும் அறிக்கை இதன் காரணமாக நகர்ப்புறங்களில் மருத்துவராகப் பணிபுரிய விரும்பும் மருத்துவர்கள் அதிகரிப்பார்களே ஒழிய கிராமப்புறங்களில் மருத்துவர்கள் கிடைப்பதே திண்டாட்டமாகும் என்பதையும் குறிப்பிடுகிறது. 


(Report Pg 92:  Following NEET, in the last 4 years, there has been an average decline of 11. 2% share of MBBS
admission among the crucial social categories in the state. The health system that
has been ensuring equitable distribution of health related resources including qualified doctors
across the state is expected to struggle due to decline in Doctors population willing to work in
rural areas) 

இப்படியான அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்களுடன் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வடக்கு நமக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறது. கல்விச் செயல்பாட்டாளர்கள் இந்தப் புள்ளிவிவரங்களைத் தற்போது விவாதித்து வருகிறார்கள்.






இந்த நிலையில் இதன் தாக்கம் என்னவாக இருக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்.