கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்துக்கு Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. அப்போது கடும் பனிமூட்டம் காரணமாக காட்டேரி மலை பகுதியில் உள்ள மலை முகடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்தனர்.
விபத்தில் சிக்கி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மறைவிற்கு நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். பிபின் ராவத்தின் மறைவை தொடர்ந்து, தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும், நிகழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும் ரத்து செய்யப்படுவதாகவும் பிபின் பிறந்த மாநிலமான உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.
இந்தநிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் மனைவி மதுலிகா ராவத் "ராணுவத்தினரின் மனைவிமார் நல சங்கம்" என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு தலைவராக செயல்பட்டு, ராணுவ வீரர்களின் குடும்பத்தில் உள்ள பெண்கள் மீதும் நலனுக்காக பாடுபட்டுள்ளார்.
தொடர்ந்து, ராணுவத்தில் உயிரிழந்த வீரர்களின் மனைவிகளுக்கு அழகுக்கலை, தையல், பின்னல் வேலை, கேக் மற்றும் சாக்லெட் தயாரித்தல் போன்ற பயிற்சிகளை வழங்கியும், மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளுக்கு நலஉதவி வழங்கியுள்ளார்.
இந்தச் சூழலில் உயிரிழந்த 13 பேரின் உடல்களில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், மற்ற 11 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவு கருகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Cremation of CDS Bipin Rawat Live: முப்படை தளபதிக்கு உலக நாடுகள் இரங்கல்: இன்று டெல்லி செல்கிறது வீரமரணம் அடைந்தோர் உடல்!