முப்படைகளின் தலைமை தளபதியான ஜெனரல் பிபின் ராவத் மறைவு, இந்தியா முழுவதும் பேரதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அவருக்கு இரங்கல் செய்திகள் வந்து கொண்டிருந்தாலும், அவர் பிறந்த உத்தர்காண்ட் மாநிலம், அவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
உத்தர்காண்ட் மாநில முதல்வர் புஷ்கர் மிங் தமி மேலும் தனது வீட்டில் பிபித் ராவத்திற்கு இரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தி, அவரது புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். மேலுமு் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார்.
அதில், ‛‛பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்ஜியின் மறைவுக்கு இந்தியா முழுவதும் இரங்கல் அலை வீசுகிறது. புனித ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் மூன்று நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன் போது, அனைத்து அரசு கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் இருக்கும், அரசு விழாக்கள் எதுவும் நடத்தப்படாது,’’ என, அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
1958 மார்ச் 16 ம் தேதி உத்தர்காண்ட் மாநிலத்தில் ராணுவ அதிகாரியான எஸ்.எஸ்.,ராவத்திற்கு மகனாக பிறந்த பிபின் ராவத், சிறந்த ராணுவ அதிகாரியாக பணியாற்றி, இந்தியாவின் முதல் முப்படைகளின் தளபதியாக உயர் பொறுப்பை வகித்தவர்.
தனது மாநிலத்தில் பிறந்து, நாட்டிற்கு உயர் சேவையாற்றிய பிபின் ராவத்திற்கு மரியாதை செய்யும் விதமாகவே, உத்தர்கண்ட் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டிய அளித்த உத்தர்காண்ட் முதல்வர் புஷ்கர் மிங் தமி கூறுகையில்,
‛‛என் தந்தையைப் போன்ற வழிகாட்டியை இன்று இழந்துவிட்டேன். ஜெனரல் பிபின் ராவத்தின் மறைவு உத்தரகாண்ட் மற்றும் இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். மறைந்த ஸ்ரீமதி மதுலிகா ராவத் ஜியிடம் நாங்கள் எப்போதும் அன்பைப் பெற்றுள்ளோம்,’’ என்று கூறியுள்ளார்.