வங்கி ஊழியர் ஒருவர், தான் பணிபுரிந்து வரும் வங்கி நிர்வாகத்தை விமர்சித்து வாட்ஸ்அப் குரூப்பில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். இதற்காக, ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவருக்கு வங்கி நிர்வாகம் சார்பில் மெமோ அனுப்பப்பட்டது. தனக்கு மெமோ அனுப்பப்பட்டதற்கு எதிராக வங்கி ஊழியர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.


அதிரடி காட்டிய சென்னை உயர் நீதிமன்றம்:


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன், மெமோவை ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அனைத்து ஊழியர்களுக்கு நிர்வாகத்தை விமர்சிக்கும் உரிமை உண்டு என அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்.


இதையும் படிக்க: Cauvery Water: ”தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் திறக்க வேண்டாம்": முதலமைச்சர் சித்தராமையாவுக்கு பறந்த பாஜகவின் கடிதம்!


தமிழ்நாடு கிராம வங்கியில் குரூப் பி அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் லக்ஷ்மிநாராயணன். தொழிற்சங்கத்தில் தீவிரமாக இயங்கி வரும் இவர், கடந்த ஜூலை 29ஆம் தேதி, வாட்ஸ்அப் குரூப்பில் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை பதிவிட்டதாகக் கூறி, வங்கி சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.


அதன் ஒரு பகுதியாக, இவருக்கு மெமோ அனுப்பப்பட்டுள்ளது. தனக்கு மெமோ அளிக்கப்பட்டதற்கு எதிராக லக்ஷ்மிநாராயணன், சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


"கோபத்தை வெளிப்படுத்த அனைத்து ஊழியர்களுக்கும் உரிமை உண்டு"


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன், "வாட்ஸ்அப் குரூப்களில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு நிர்வாகத்தால் அதன் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இதுபோன்று கருத்து தெரிவிப்பது எந்த சட்டத்தையும் மீறும் வகையில் இல்லை. கோபத்தை வெளிப்படுத்துவதற்கு என உரிமை உள்ளது.


ஒவ்வொரு பணியாளருக்கும் அல்லது ஒரு நிறுவனத்தின் ஊழியருக்கும் நிர்வாகத்துடன் ஏதேனும் சிக்கல்கள் இருக்கும். குறை உணர்வை இருப்பது மிகவும் இயற்கையானது. புகார்கள் வெளிப்படுவதே நிறுவனத்திற்கு நல்லது. இது, நேர்மறையான மாற்றத்தையே ஏற்படுத்தும். இதில், அமைப்பின் இமேஜ் பாதிக்கப்படுகிறது என்றால், அதன் பின்னரே நிர்வாகம் தலையிடலாம். அதுவரை, தலையிடக் கூடாது.


பரிந்துரைக்கப்பட்ட நடத்தை விதிகளுக்குக் கட்டுப்பட்ட ஒரு அரசு ஊழியருக்கு, தனிப்பட்ட குடிமகனுக்குக் கிடைக்கும் அதே உரிமைகள் கிடைக்காது என்றாலும், அரசியலமைப்பின் 19(1)(a) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படை உரிமையை அது பறிக்காது.


லக்ஷ்மிநாராயணன், தனது கருத்துகளை மட்டுமே வெளிப்படுத்தியிருந்தார். மேலும், அவரது கருத்துகள் மோசமான ரசனையுடன் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டபோது உடனடியாக மன்னிப்பும் கேட்டிருக்கிறார்" என தெரிவித்துள்ளார்.


இதையும் படிக்க: Tamil Kudimagan Trailer: ’பறையரில் இருந்து பறைய எடுத்துட்டா எந்த பிரச்னையும் இருக்காது’- கவனம் பெறும் ’தமிழ்க்குடிமகன்’ ட்ரைலர்