Shocking Video: உத்தர பிரதேசத்தில் தெருவில் நடந்துச் சென்ற 7 வயது சிறுவனை நாய்கள் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்துள்ளார்.


தொடரும் பயங்கரம்:


நாட்டில் சமீபகாலமாக தெருநாய்கள் கடித்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. முதலில் இந்த சம்பவம் கேரளாவில் அதிகளவில் இருந்தது. அதனை தொடர்ந்து தெலங்கானா, கர்நாடகா, மும்பை என பல்வேறு பகுதியில் தெருநாய்கள் குழந்தைகளை கடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் கூட தெலங்கானாவின் ஹனுமகொண்டா மாவட்டத்தில் மட்டும் கடந்த மாதத்தில் தெருநாய் கடி சம்பவங்கள் 29 முறை அரங்கேறியுள்ளது. ஹைதரபாத்தின் ஆம்பர்பேட்டில் கடந்த மாதம் 5 வயது சிறுவன் தெருநாய் கடித்து உயிரிழந்தான். இதனால் தெரு நாய்க்கடி சம்பவத்தால் பலரும் அடிக்கடி பாதிக்கப்படுவதால், இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்


கடித்து குதறிய நாய்கள்:


இந்நிலையில், மற்றொரு சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று மாலை 7 வயது சிறுவன் கடைக்கு சாக்லெட் வாங்க சென்றான். சாக்லெட் வாங்கிவிட்டு வீடு திரும்பினார். அப்போது, வீட்டிற்கு அருகில் நடந்துச் செல்லும்போது சுமார் 5 நாட்கள் அந்த சிறுவனை சுற்றி வளைத்து கடித்து குதறியது. சிறுவனின் பெற்றோர் வீட்டிற்குள் இருந்ததால் அவனது அலறல் சத்தம் அவர்களுக்கு கேட்கவில்லை. இதனை அடுத்து, சுமார் 5 நிமிடங்கள் மேலாக நாய்கள் கடித்ததில் அந்த சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிறுவனை நாய்கள் கடிக்கும் சிசிடிவி காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.


சிசிடிவி காட்சி:






பின்னர், நாய்களில் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தின் ஓடிவந்து பார்த்துள்ளனர். நாய்கள் கடித்ததில் படுகாயம் அடைந்த சிறுவனை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த சிறுவன் விராஜ் குப்தா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.  இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் கூறுகையில், "நான் வீட்டில் வேலை செய்துக் கொண்டிருந்தேன். அதனால் எனக்கு சத்தம் கேட்கவில்லை. நாய்கள் குரைக்கும் சத்தம் அதிகமாக கேட்டதால் வெளியே சென்று பார்த்த போது எனது மகனை நாய் கடித்துக் கொண்டிருந்தது. நாய் தொல்லை குறித்து பலமுறை புகார் அளித்தோம் எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியாவது இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.