ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், "எனது நண்பரான  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் இந்தக் காலக்கட்டத்தில் வழங்குவோம்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.


இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், "அமெரிக்காவின் வலிமையான கூட்டாளி  இந்தியா. ஜி20 அமைப்புக்கு தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு அமெரிக்காவால் முடிந்த அனைத்து ஆதரவையும் வழங்குவோம். சுற்றுச்சூழல், ஆற்றல் மற்றும் உணவுப் நெருக்கடி ஆகிய சவால்களை ஒன்றாக இணைந்து எதிர்கொண்டு நிலையான மற்றும் ஒருங்கிணைந்த சவால்களை கடந்து செல்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக, ஜி20 நாடுகளுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு அதுதொடர்பாக பிரதமர் மோடி "சில சிந்தனைகள்" என்ற தலைப்பில் எழுதி ட்விட்டரில் அதிபர் ஜோ பைடனை டாக் செய்தார்.
அந்த ட்வீட்டுக்கு பதில் அளித்து ஜோ பைடன் இவ்வாறு பதில் ட்வீட் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தோனேசியாவில் கடந்த மாதம் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்றது. அதில் ஜி-20 அமைப்பின் விதிமுறைகளின்படி அடுத்த ஆண்டு மாநாட்டை நடத்துவதற்கான தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. 


அதன்படி, டிசம்பர் 1-ஆம் தேதி அதிகாரப்பூர்வ முறைப்படி ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது. அந்த வகையில் நேற்று முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி வரை ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்று நடத்தும்.


ஜி20 என்பது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85%, உலகளாவிய வர்த்தகத்தில் 75% மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்ட  சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றமாகும். ஜி 20 நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, கனடா, பிரேசில், பிரான்ஸ், சீனா, இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, இந்தோனேசியா, கொரியா குடியரசு, ஜப்பான், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, இங்கிலாந்து, துருக்கி, அமெரிக்கா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.






ஓர் ஆண்டு தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா, உலகளாவிய பிரச்சனைகளான பருவநிலை மாறுபாடு, தீவிரவாதப் பிரச்சனை, கடன்பிரச்சனை, கொரோனா தாக்கம்,  உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காண முயலும். வரும் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் ஜி 20 நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது.  ஜி20 தலைமையின் போது, நாடு  முழுவதும் பல இடங்களில் 32 வெவ்வேறு துறைகளில் சுமார் 200 கூட்டங்களை இந்தியா நடத்தும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாடு, இந்தியாவால் நடத்தப்படும் மிக உயரிய சர்வதேசக் கூட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


நாடாளுமன்றத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட எம்பிக்கள்...பெண் எம்பி மீது தாக்குதல்.. என்ன ஆச்சு?


கடந்த மாதம் இந்த இலச்சினை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய தேசியக் கொடியின் 4 நிறங்களையும் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பூமி தாமரை மீது அமர்ந்திருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 7 இதழ்களும் உலகின் 7 கண்டங்களும் ஜி20 மாநாட்டில் ஒன்றிணைவதை குறிக்கிறது. இதில் உள்ள பூமி, இந்தியாவின் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் கொள்கையைப் பிரதிபலிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.