ஜூன் 12 முதல் அமலுக்கு வரும் புதிய கலால் கொள்கைக்கு ஹரியானா அரசு செவ்வாய்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கொள்கையால் மாநிலத்தில் மதுபானத்தின் விலை 10-15 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஹரியானாவில் மதுபானங்களின் விலை டெல்லியில் உள்ள விலையை விட குறைவாகவே இருக்கும்.
முதல்வர் மனோகர் லால் கட்டார், இந்த புதிய கொள்கைக்கு ஒப்புதல் அளித்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் கலால் வருவாய் இரட்டிப்பாகியுள்ளதாக அறிவித்தார். கலால் கொள்கை 2022-23 மூலம், வருவாய் ₹10,000 கோடியைத் தாண்டுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.
இந்த கொள்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய விஷயங்கள்
- சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகவும், மாடுகளின் நிலையை மேம்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு மதுபான பாட்டிலுக்கும் 'மாட்டு வரி' விதிக்கப்படும் என்றும், அதற்காக மதுபானம் வாங்குபவர்கள் ரூ.5 கூடுதலாக செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
- மாநிலத்தில் இப்போது 'குறைந்தபட்ச' சில்லறை விலை மட்டுமே உள்ளது, அதிகபட்ச சில்லறை விலை கிடையாது. அதாவது கடைகள் குறைந்தபட்ச விலைக்கு மேல் எந்த விலையிலும் மதுவை விற்கலாம். அதுமட்டுமின்றி அருகில் உள்ள டெல்லியுடன் ஒப்பிடும்போது அந்த விலைக்கே வழங்கலாம்.
- கார்ப்பரேட் அலுவலகங்கள் குறைந்தபட்சம் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில், 5,000 பேருக்கு மேல் பணிபுரியும் போது, அவர்கள் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் செலுத்தினால், பீர் மற்றும் ஒயின் போன்ற குறைந்த ஆல்கஹால் கொண்ட பானங்களை அலுவலக வளாகத்திலேயே வழங்கலாம்.
கடைகள் எண்ணிக்கை குறைப்பு
MSME துறைக்கு உந்துதல் அளிக்கும் விதமாக சிறிய (கைவினை) மதுபான ஆலைகளுக்கான உரிமக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மது ஆலைகளுக்கான மேற்பார்வைக் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. சில்லறை மதுபான விற்பனை கடைகளின் அதிகபட்ச எண்ணிக்கை 2500ல் இருந்து 2400 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பஞ்சகுலாவில் உள்ள ஸ்ரீ மாதா மானசா தேவி கோயிலைச் சுற்றியுள்ள புனிதப் பகுதிகளிலும், ‘குருகுலங்கள்’ உள்ள கிராமங்களிலும் மதுபானக் கடைகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபான விற்பனை நேரங்களில் மாற்றம் எதுவும் இல்லை.
விலையேற்ற நிலவரம்
உள்நாட்டு மதுபானங்களின் குறைந்தபட்ச சில்லறை விலை ஒரு குவார்ட்டருக்கு ₹160ல் இருந்து ₹170 ஆகவும், மெட்ரோ மதுபானங்கள் ஒரு குவார்ட்டருக்கு ₹210ல் இருந்து ₹220 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் குறைந்தபட்ச சில்லறை விலையும் (IMFL) சூப்பர் பிரீமியம் பிராண்டுகளுக்கு ஒரு குவார்ட்டருக்கு ₹3,000லிருந்து ₹3,100 ஆகவும், சூப்பர் டீலக்ஸ் பிராண்டுகளுக்கு குவார்ட்டருக்கு ₹875 ஆகவும், வழக்கமான பிராண்டுகளுக்கு குவார்ட்டருக்கு ₹400 முதல் ₹420 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஸ்காட்ச் ஒரு லிட்டர் பாட்டிலின் விலை ₹200-350 ஆகவும், IMFL விஸ்கியின் விலை லிட்டருக்கு ₹100-150 ஆகவும் உயர வாய்ப்புள்ளது. 12 பீர்கள் கொண்ட கேசின் விலை தற்போது ரூ.120 உயர்ந்துள்ளது. எகானமி பிராண்டுகளுக்கான குறைந்தபட்ச சில்லறை விலையானது ஒரு குவார்ட்டருக்கு ₹230 என்ற அதே விலையில் நீடிக்கிறது.
உரிமங்களில் மாற்றம்
மைல்ட் மற்றும் சூப்பர் மைல்டு வகைகளின் கீழ் தயாராகும் பானங்கள் மற்றும் பீர் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 'பப்'ற்கான உரிமக் கட்டணம் மேலும் குறைக்கப்பட்டுள்ளது. மொத்த விற்பனை உரிமம் பெற்றவர்கள் மதுபாட்டில்களை கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் பெற்றவர்களால் பல்வேறு தளங்களில் மதுபான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஹோட்டல்கள், பப்கள் மற்றும் பார்கள், உணவகங்கள் மற்றும் மதுபானம் வழங்கும் கஃபே ஆகியவை கட்டிடத்திற்கு வெளியே எச்சரிக்கை பலகைகளைக் வைக்க வேண்டும். அதே நேரத்தில் சில்லறை கடைகளில் தீயணைப்பு கருவிகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5,000 பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள், தற்காலிக உரிமம் (L-12AC) பெறுவதற்கு ஒரு நாளைக்கு ₹50,000 செலுத்த வேண்டும், முன்பு இந்த கட்டணம் ₹10,000 ஆக இருந்தது.