கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக அரசுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு காங்கிரஸ் கட்சி மரண அடி கொடுத்துள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 


கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு கடந்த மே 10 ஆம் தேதி நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சியமைக்க தேவையான 113 இடங்களை கிட்டதட்ட நெருங்கி விட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த எழுச்சியை பாஜக சற்றும் எதிர்பார்க்காது என பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


பாஜகவின் அரசியல் கேம்


இந்தியாவில் பல மாநிலங்களில் ஆளும் அரசின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, அரசியல் உள்ளடி வேலைகள் செய்வதை பாஜக கடந்த சில ஆண்டுகளாக கையிலெத்து வருகிறது. அப்படி பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று. அங்கு கடந்த கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. 



ஆனால் 2 சுயேட்சை , கூட்டணிக் கட்சியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள்,  அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால்  117 ஆக இருந்த கூட்டணி அரசின் பலம் 101 ஆக குறைந்தது. அதேசமயம் 105 எம்எல்ஏக்கள் கொண்ட எதிர்க்கட்சியான பாஜக, முதலமைச்சராக இருந்த குமாரசாமி பதவி விலக வேண்டும். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதன்பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிந்தது. பாஜக ஆட்சி அமைத்தது. முதலில் எடியூரப்பாவும், பின்னர் பசவராஜ் பொம்மையும் இந்த ஆட்சிக்காலத்தில் முதலமைச்சராக இருந்தனர்.  


“பிளான் பி”யை கையிலெடுக்க நினைத்த பாஜக


கர்நாடகா பாஜக அரசில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த அசோகா, ‘தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் “பிளான் பி” இருப்பதாகவும், உயர்மட்ட குழுவின் வழிகாட்டுதலின்படி பாஜகவின் ஆபரேஷன் தொடங்கும்’ எனவும் தெரிவித்திருந்தார். மேலும், ‘கர்நாடகாவில் நாங்கள் ஆட்சி அமைப்போம். எப்படி, எப்போது என்று கேட்காதீர்கள். என்ன செய்வது என்பது குறித்தும்,  பிளான் பி குறித்து, எங்களது மத்திய மற்றும் மாநில தலைவர்களுடன் ஆலோசிப்போம்’ எனவும் தெரிவித்திருந்தார். 


ஆனால் பாஜகவே எதிர்பாராத அளவுக்கு தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது. இந்த வெற்றி கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்றம் முதல் உள்ளாட்சி தேர்தல் வரை பல தோல்விகளை சந்தித்து வந்த காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் களைக்கட்டிய நிலையில், பாஜக அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி செய்த ஒரே மாநிலமான கர்நாடகாவில் ஏற்பட்ட தோல்வி அக்கட்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. 


மேலும் படிக்க: Karnataka Election Results 2023 LIVE: ரெடியான ஹெலிகாப்டர்: பறக்கத்தயாராகும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்! கதிகலக்கத்தில் கர்நாடக பாஜக! தகவல்கள் உடனுக்குடன்..!