கர்நாடகாவில் தோல்வி முகத்தில் பாஜக உள்ள நிலையில் தென்னிந்தியாவில் இருந்து பாஜக தனது பிடியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.


இந்திய மாநிலங்களில் உத்தரபிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறது. ஆனால், மாநிலக் கட்சிகளின் பிடியில் உள்ள தென்னிந்திய மாநிலங்களில் பாஜகவிற்கான இடம் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக அதிமுகவை சார்ந்தே இருக்க வேண்டிய சூழல் இன்னும் நிலவுகிறது. தேர்தல்களில் குறிப்பிடத்த வெற்றியை இன்னும் பாஜகவால் பெறமுடியவில்லை. கேரளாவிலும், கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தான் முன்னனியில் இருக்கின்றன. கணிசமான வாக்கு சதவீதம் இருந்தாலும் பாஜகவால் அங்கு அதிகாரம் செலுத்த முடியவில்லை. ஆந்திராவிலும், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி ஆகியவையே மாறி மாறி ஆட்சியமைத்து வருவதால் அங்கு பாஜகவிற்கான இடம் காலியாகவே உள்ளது. அதேபோல தெலங்கானா மாநிலம் உருவானது முதலே பாரதிய ராஷ்ட்ர சமிதி கட்சியே ஆட்சியில் இருந்து வருவதால் அங்கும் பாஜகவிற்கான இடம் காலியாகவே உள்ளது.


இந்த நிலையில் தென்னிந்தியாவில் பாஜகவுக்கு  ஒரே பிடிமானமாக இருந்தது கர்நாடகா மட்டுமே. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில்  ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்த நிலையில், காங்கிரஸ் மற்றும் ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்கள் 17 பேர் பாஜகவிற்கு தாவியதால் எடியூரப்பா ஆட்சியமைத்தார். இந்தநிலையில் தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் கர்நாடகாவில் ஆட்சியமைப்பதற்கான எண்ணிக்கையை விட அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. மேலும், ஜனதா தளம், பாஜக கூட்டணி அமைந்தாலும் ஆட்சியைப் பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாஜகவின் தோல்வி கர்நாடகாவில் உறுதியாகியுள்ளது.


இந்த தோல்வியால், கர்நாடகாவில் மட்டுமே தங்கள் பிடியை வைத்திருந்த பாஜக அதிகாரப்பூர்வமாக தென்னிந்திய மாநிலங்களில் தனது அதிகாரத்தை இழந்துள்ளது.


 கர்நாடகா தேர்தலில் தற்போது, தோல்வி முகத்தை சந்தித்துள்ள பாஜக வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் கூடுதல் கவனம் செலுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.