பார்ட்டிக்காக காட்டுக்குள் செல்லும் சிலரின் பொறுப்பற்ற செயலால் வன விலங்குகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பத்லாபூர் அருகே பிளாஸ்டிக் குடுவைக்குள் தலை சிக்கிய நிலையில் சிறுத்தை ஒன்று காணப்பட்டது.
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ ஒன்று, தலையில் பிளாஸ்டிக் குடுவை சிக்கியதால் சிறுத்தை போராடுவதைக் காட்டுகிறது. பிளாஸ்டிக் குடுவையில் சிறுத்தை எப்படி தலை சிக்கியது என்பது இன்னும் தெரியவில்லை. இதுதொடர்பாக மகாராஷ்டிர வனத்துறையினர் அந்த சிறுத்தையை தேடி வருகின்றனர்.
காரில் பயணித்த சிலர் சிறுத்தையை கண்டனர். ஆனால் அவர்கள் அதை நெருங்க முயன்றபோது அது வனப்பகுதியில் காணாமல் போனது.
இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட உத்கர்ஷ் சிங், சுற்றுலாப் பயணிகளின் பொறுப்பற்ற செயலால், தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூர் அருகே பிளாஸ்டிக் குடுவைக்குள் தலை சிக்கிய நிலையில் சிறுத்தை ஒன்று காணப்பட்டது. மஹாராஷ்டிரா வனத்துறையினர் குடுவையில் இருந்து சிறுத்தையை அகற்றுவதற்கான தேடுதல் பணியை தொடங்கியுள்ளனர்’ எனப் பதிவிட்டுள்ளார்.
வீடியோ:
முன்னதாக உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் கடந்த 5 ஆம் தேதி நடந்த மற்றொரு சம்பவத்தில், ஒரு பெண் தனது ஆறு வயது மகளை சிறுத்தையின் தாக்குதலில் இருந்து காப்பாற்றினார். சிறுமி தனது வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது சிறுத்தை தாக்கியது.
மகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த, அந்த பெண் சிறுத்தையை கனத்த கட்டையால் தாக்கினார். இதையடுத்து சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
சிறுத்தை தாக்கியதில் சிறுமி பலத்த காயம் அடைந்தார். சிறுத்தை சிறுமியை தாக்கி இழுத்து செல்ல முயன்றது. சிறுமியின் முகம் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. பஹ்ரைச் வனப் பிரிவின் நான்பாரா மலைப்பகுதியில் இருந்து சிறுத்தை வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்