சில நிமிடங்களை மிச்சப்படுத்துவதற்கான முயற்சியில், மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவருக்கு மிகப் பெரிய பாடத்தைக் கற்பித்துள்ளது. ராஜஸ்தானின் கோடா நகருக்குச் செல்லும் ரயில் ஒன்று. நூலிழையில் உயிர் தப்பிய நபரின் மோட்டார் சைக்கிள் வேகமாகச் செல்லும் ரயிலுக்கு அடியில் நொறுங்கும் சிசிடிவி வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சிசிடிவி வீடியோ பதிவு கடந்த பிப்ரவரி 12 அன்று மாலை உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள ரயில்வே இருப்புப் பாதைகள் சந்திப்புப் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் ரயில் தண்டவாளங்கள் மூடப்பட்டிருப்பதையும் கண்டுகொள்ளாமல் வேகமாக மோட்டார் சைக்கிளில் செல்லும் நபர் ஒருவர், தண்டவாளத்திற்கு அருகில் சென்றவுடன் தன்னை நெருங்கி வரும் ரயிலைக் கண்டு சுதாரித்து வாகனத்தைத் திருப்புவதற்கு முன்பு, ரயில் அவரது வாகனத்தை இடித்து நொறுக்குகிறது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டியவரும் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ அதனைப் பார்ப்போரைத் திகிலடையச் செய்துள்ளது. கடந்த ஆண்டு வெகுசில நொடிகளில் இருசக்கர வாகன ஓட்டுநர் ஒருவரும் ரயில் இடிப்பதற்கு முன்பு தப்பித்ததையும் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர். மேலும், பலரும் இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
.`பொறுமையில்லாத, அதிபுத்தி கொண்டவர்களாகத் தம்மை நினைத்துக் கொள்ளும் ஓட்டுநர்களும், விதிமீறலில் ஈடுபடும் ஓட்டுநர்களும் இதுபோன்ற வீடியோக்களைத் தினமும் பார்க்க வேண்டும்’ என ட்விட்டர் பயனாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். தண்டவாளங்களுக்கான தடுப்புகளைக் கடந்து, ரயில்வே தண்டவாளங்களை நெருங்குவதைத் தவிர்க்கவும், அவ்வாறு செய்வதைத் தடுக்கவும் சட்ட விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
`இப்போது அவரின் வாகனம் நொறுங்கியுள்ளது.. அவர் சுமார் 440 வால்ட் மின்சாரத்தைத் தனது உடலில் எதிர்கொண்டிருப்பார்.. அவரது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.. இவை அனைத்துமே சில நிமிடங்களை மிச்சப்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சியே காரணம்.. எதை விதைக்கிறோமோ, அதனை அறுவடை செய்வோம்..’ என மற்றொரு ட்விட்டர் பயனாளர் இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.